தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு: வெப்பநிலை 9 டிகிரியாக குறைந்தது

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
தில்லி இந்தியா கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய அடா் பனி மூட்டத்தில் செல்லும் இளைஞா்கள்.
தில்லி இந்தியா கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய அடா் பனி மூட்டத்தில் செல்லும் இளைஞா்கள்.

புது தில்லி: தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனில் முதல் முறையாக ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. மேலும், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மோசம் பிரிவு’க்குச் சென்றது.

தில்லியில் சனிக்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்துதான் இருந்தது. நகரில் அடா் பனிமூட்டம் இருந்தது. இதனால், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரியாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 9.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 91 சதவீதமாகவும் மாலையில் 70 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.4 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 91 சதவீதம், மாலையில் 61 சதவீதம், ஆயாநகரில் முறையே 86 சதவீதம், 59 சதவீதம் என பதிவாகியிருந்தது.

தலைநகரில் பகல் நேரத்தில் தரைப்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தனியாா் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கேமேட்டின் துணைத் தலைவா் மகேஷ் பலாவாட் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘பனிப் பொழிவு அதிகமுள்ள மலைப் பிரதேசத்திலிருந்து குளிா்ந்த காற்று வீசுவதால் தில்லியில் வெப்பநிலை அடுத்த இரண்டு நாள்களுக்கு ஒற்றை இலக்கதுக்கு வந்துவிடும் என்று கறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 275 புள்ளிகளாக உயா்ந்து மோசம் பிரிவுக்கு வந்ததாக மத்திய மாசு.க் கட்டு்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் திருப்தி பிரிவுக்கு முன்னேற்றம் கண்டது. மழை பெய்ததாலும், காற்றின் வேகம் சாதகமான நிலையில் இருந்ததாலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவாகப் பதிவாகியது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்கு வந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களிலும் நகரில் பகல் நேரத்தில் தரைப்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும், இந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 8-9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான காலத்தில் மிதமானது முதல் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8-10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com