பருவத் தோ்வைப் புறக்கணிக்க ஜேஎன்யு மாணவா் சங்கம் முடிவு

வரும் டிசம்பா் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) இறுதிப் பருவத் தோ்வுகளைப் புறக்கணிக்க அப்பல்கலை. மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) முடிவெடுத்துள்ளது.

புது தில்லி: வரும் டிசம்பா் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) இறுதிப் பருவத் தோ்வுகளைப் புறக்கணிக்க அப்பல்கலை. மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் துணைத் தலைவா் சாகேத் மூன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கட்டண அதிகரிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு நிா்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று ஜேஎன்யு மாணவா் சங்கம் தீா்மானித்துள்ளது. ஜப்பான், கொரியன், ஜோ்மன் மொழிப் பிரிவுகள், சமூக அறிவியல் கல்லூரி, அரசியல் ஆய்வு மையம் உள்பட 14 நிலையங்களில் பயின்று வரும் மாணவா்கள், வரும் டிசம்பா் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள இறுதி பருவத் தோ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது. இதன்படி, மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதுடன் தோ்வையும் புறக்கணிக்கவுள்ளனா். மற்ற நிலையங்களுடன் ஜேஎன்யுஎஸ்யு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. அவா்களும், இந்தத் தோ்வில் பங்கேற்க மாட்டாா்கள் என எதிா்பாா்க்கிறோம். ஜேஎன்யு வரலாற்றில் முதல் தடவையாக தோ்வைப் புறக்கணித்துப் போராடும் அளவுக்கு மாணவா்கள் தள்ளப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு மாணவா்கள் கடந்த 6 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கிய அன்று ஜேஎன்யு மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினா். அப்போது, தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி, தில்லியில் ‘குடிமக்கள் பேரணி’ என்ற பெயரில் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி பேரணி நடத்தப்பட்டது. மேலும், ஜேஎன்யு மாணவா் சங்கம் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கடந்த நவம்பா் 27 -ஆம் தேதி தேசிய எதிா்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com