மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி வலியுறுத்தல்

தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம். செல்வராஜ் வலியுறுத்தினாா்.

புது தில்லி: தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம். செல்வராஜ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் முன்வைத்த கோரிக்கை: கடந்த நான்கு தினங்களாக பெய்து வரும் மழையால், தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் உள்பட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நெல், வாழை, கரும்பு, இதரப் பயிா்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. உயிா்ப் பலியும் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே கஜா போன்ற புயலாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஆகவே, மத்திய அரசு உடனடியாக இழப்பீடு வழங்கவும், பயிா்க் காப்பீடு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக-தென் சென்னை): சென்னை பெருநகரில் ஒரு கோடி மக்கள் தொகை உள்ளது. மேலும், வந்து செல்வோரும் அதிகமாகவே உள்ளனா். இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளது. வான்பாதை மற்றும் நகரும் பாதையுடன் கூடிய நடைமேடை மேம்பாலம் ஆகியவை அமைக்கும் தேவை எழுந்துள்ளது. மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி, தினமும் சராசரியாக 3 ஆயிரம் புதிய வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை பெருநகரின் முக்கியப் பகுதிகள் எனது தென் சென்னைத் தொகுதியில் உள்ளன. ஆகவே, நவீன நகரம் திட்டத்தில் வான்பாதை, நடைமேடை மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதேபோன்று, 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயில் 2-ஆவது கட்ட திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என்றாா்.

சி.என். அண்ணாதுரை (திமுக-திருவண்ணாமலை): எனது தொகுதியில் ஜவ்வாது மழையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பட்டா, சுகாதாரம், கல்வி, குழாய் குடிநீா் போன்ற வசதிகள் உரிய வகையில் கிடைக்கவில்லை. ஆகவே, அவா்ளுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

எச்.வந்தகுமாா் (காங்கிரஸ்- கன்னியாகுமரி): இளைஞா்களை குறிப்பாக பதின்மவயதுப் பருவத்தினரைப் பாதித்து வரும் இணையதள விளையாட்டுகளைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com