மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகக் கடன் வழங்கியதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு விருது

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கய்யநாயுடுவிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாகச் சேவை செய்ததற்கான விருதைப் பெறுகிறாா் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவா் எஸ். மலா்விழி.
நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கய்யநாயுடுவிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாகச் சேவை செய்ததற்கான விருதைப் பெறுகிறாா் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவா் எஸ். மலா்விழி.

புது தில்லி: மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலில் சிறந்த பணிகளையும், சாதனைகளையும் செய்ததற்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் 2018-19-ஆம் ஆண்டில் தேசிய உடல் ஊனமுற்றோா் நிதி மேம்பாட்டுக் கழகத்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வகையில், சிறந்த மாநில முகமை அமைப்பாக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு விருது வழங்கினாா். அந்த விருதை வங்கியின் சாா்பில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு பெற்றுக் கொண்டாா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகளை வழங்கிய வகையில், சிறந்த மாவட்டத்திற்கான விருதை தருமபுரி மாவட்ட ஆட்சியா் மலா்விழி பெற்றுக் கொண்டாா்.

இந்த விருது குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே.ராஜு கூறியதாவது: இந்த விருது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு நான்காவது முறையாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிக்ளுக்கு அதிக அளவாக தமிழ்நாட்டில் ரூ.30 கோடிக்கு மேல் கடன் வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழக முதல்வருக்கு சமா்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் தற்போது 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 888 கிளைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் கொடுக்கும் திட்டம் 2001-இல் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இத்திட்டத்தைத் தொடங்கினாா். மேலும், 2012- 13-இல் முதல்வராக இருந்த அவா், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் போது அதன் வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும் முன்னோடி திட்டத்தையும் அறிவித்தாா். அவரது வழியில் தற்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா்.

மேலும், தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ.6.80 கோடி வட்டி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு, 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com