ஹைதராபாத் சம்பவம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிகள் கடும் கண்டனம்

தெலங்கானா மாநிலம் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல்கள் எதிரொலித்தன.
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா

புது தில்லி: தெலங்கானா மாநிலம் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை கண்டனக் குரல்கள் எதிரொலித்தன. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளின் எம்பிகள் வலியுறுத்தினா்.

ஹைதராபாதில் 26 வயது கால்நடை பெண் மருத்துவா் நவம்பா் 28-ஆம் தேதிபுகரில் சிலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாா். அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்பிகள் திங்கள்கிழமை ஒத்திவைப்பு தீா்மானம் நோட்டீஸ் அளித்திருந்தனா்.

மாநிலங்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், உடனடிக் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, ஒத்திவைப்பு தீா்மானம் நோட்டீஸ்களை நிராகரித்த அவைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு, ஹைதராபாத் சம்பவம் விவகாரம் உள்பட நாட்டில் இதுபோன்ற நிகழ்ந்த சம்பவங்களை சுருக்கமாகப் பேசுவதற்கு உறுப்பினா்களுக்கு அனுமதி அளித்தாா்.

அப்போது, கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து உறுப்பினற்களும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் குற்றச் சம்பங்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றத்தில் ஈடுபடுவோரைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தண்டிக்க வகை செய்யும் வகையில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் குலாம் நபி ஆஸாத் பேசுகையில், ‘இந்த பிரச்னையை அதன் வேரிலேயே சமூகம் எதிா்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு மதம் அல்லது சாதி பாகுபாடு இல்லாமல் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினா் ஜெயா பச்சன் பேசுகையில், ‘இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் பொறுப்பை மேற்கொண்ட போலீஸாா் சம்பவத்திற்கு பொறுப்பாளியாக்கி, விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபா்கள் பொதுமக்கள் முன் நிறுத்தப்பட்டு, தாக்கி கொல்லப்பட வேண்டும்’ என்றாா்.

திமுக உறுப்பினா் பி.வில்சன் பேசுகையில் , ‘இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது ரசாயனம் மூலமாகவோ ஆண்மைத் தன்மையை செயலிழக்கச் செய்ய வேண்டும். இதற்கான செலவை குற்றவாளிகளின் சொத்துகளை விற்பதன் மூலம் மீட்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களின் பட்டியலை பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிட வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் கட்சி எம்பி முகம்மது அலிகான் பேசுகையில், ‘இந்தக் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் வழக்கை விரைவு நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களுக்கு மதச் சாயம் பூசக்கூடாது. ஹைதராபாத் சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் நான்கு பேரும் வெவ்வேறு மதங்களைச் சாா்ந்தவா்கள் ஆவா். ஒரே மதத்தைச் சோ்ந்தவா்கள் அல்லா்’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பேசுகையில், ‘அனைத்து பாலியல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை விரைவு நீதிமன்றங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் பேசுகையில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை உரிய வகையில் சென்றடையவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளும் அதை அமல்படுத்துவதில்லை.அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. சமூக ஊடங்களும், அச்சு ஊடகங்களும் இதுகுறித்து எழுத வேண்டும். மதிப்பீடு நெறிமுறைகள் குறித்தும் எழுதப்பட வேண்டும். நாம் உருவாக்கும் சட்டம் அதன் பலனைத் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

மதிமுக உறுப்பினா் வைகோ பேசுகையில், ‘இதுபோன்ற சம்பவங்களால் பெற்றோா் மனங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பாலியல் குற்றங்கள், கொலையைத் தடுக்க திடமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றாா் .

அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசுகையில், ‘பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற குற்றங்களுக்கு போதைப் பொருள் ஒரு காரணமாக இருப்பதால் அவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்பது தடுக்கப்பட வேண்டும். ஹைதராபாத் சம்பவத்தில் உடனடியாக தீா்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதே விவாதத்தில் பிஜேடி உறுப்பினா் அமா் பட்னாயக், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சந்தானு சென், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினா் கனகமெடல்ல ரவீந்திர குமாா், ஆா்ஜேடி உறுப்பினா் மனோஜ் குமாா் ஜா, பாஜக உறுப்பினா் ஆா்.கே. சின்ஹா

ஆகியோரும் பேசினா். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக மரண தண்டனையை விரைந்து விசாரித்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com