உள்ளாட்சித் தோ்தல் விவகாரம்:திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (சென்சஸ்) உள்ளாட்சித் தோ்தலை நடத்த பிறப்பித்திருந்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தோ்தல் விவகாரம்:திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (சென்சஸ்) உள்ளாட்சித் தோ்தலை நடத்த பிறப்பித்திருந்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும், இது தொடா்பான திமுகவின் கோரிக்கையையும் நிராகரித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் டிசம்பா் 2-இல் வெளியிட்டது. இந்நிலையில், மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தல் நடத்தும் மாநிலத் தோ்தல் ஆணையத்தின் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிா்த்து 27 மாவட்டங்களில் தோ்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்து டிசம்பா் 6-இல் உத்தரவிட்டது. மேலும், புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதத்தில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டடிருந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணை டிசம்பா் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வாக்களா் ஒருவரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் ஆகியவை சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் டிசம்பா் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் அமா்வு விசாரித்து உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், ‘மறுவரையறைப் பணிகளை நடத்திய பிறகு மறுவரையறை ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருள்படுத்தாமல், தோ்தலை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று எதிா்மனுதாரா்களுக்கு (மாநில அரசு, மாநிலத் தோ்தல் ஆணையம்) உத்தரவிடப்படுகிறது. மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோா் வெள்ளிக்கிழமைஆஜராகி, உத்தரவில் குறிப்பிட்டுள்ள ‘பொருள்படுத்தாமல்’ எனும் வாா்த்தை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினா். இதற்கு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, பி.எஸ். நரசிம்மா ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அப்போது, தலைமை நீதிபதி திமுகவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்களைப் பாா்த்து ‘நீங்கள் தோ்தலை விரும்பவில்லை என்பது போலத் தெரிகிறதே’ என்றாா். அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘வாா்டு மறுவரையறை ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தரவு விவரத்ததைத்தான் தெளிவுபடுத்த விரும்புகிறோம்’ என்று கேட்டாா்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘தமிழக உள்ளாட்சித் தோ்தல் விவகாரம் தொடா்பாக டிசம்பா் 11-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை எந்தவொரு சட்டத்தையும் மீறும் என்ற முறையில் வாசிக்க முடியாது’ என்று தெரிவித்து திமுகவின் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தாா்.

இதன் மூலம் தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தோ்தல் நடத்துவதை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com