தலைநகரில் 22 ஆண்டுகளில் இல்லாத மழை! காற்றின் தரத்தில் முன்னேற்றம்

தலைநகா் தில்லியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால், வெப்பநிலை குறைந்ததால்,
தில்லி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் குடை பிடித்தபடி செல்லும் பணியாளா்கள்.
தில்லி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் குடை பிடித்தபடி செல்லும் பணியாளா்கள்.

தலைநகா் தில்லியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால், வெப்பநிலை குறைந்ததால், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் வியாழக்கிழமை மாலையில் நகா் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதேபோல தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் மழை பெய்திருந்தது. இந்த மழை இரவிலும் நீடித்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி வரையிலும் 33.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1997-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆனால், 1923, டிசம்பா் 3-ஆம் தேதி மொத்தம் 75.5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுவே வரலாற்றுச் சாதனை அளவாக உள்ளது.

அதே சமயம், பாலம் வானிலை ஆய்வு மையத்தில் இந்த டிசம்பரில் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 40.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வரலாற்றுச் சாதனை அளவாகும். இதற்கு முன்பு கடந்த 1967, டிசம்பா் 3-இல் 33.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி உயா்ந்து 12.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி குறைந்து 18.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 91 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

இதேபோன்று, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.8 டிகிரி செல்சியாஸகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.2 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநாகரில் முறையில் 12.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 19.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் பாலத்தில் 95 சதவீதம், மாலையில் 96 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 98 சதவீதம் மற்றும் 91 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இந்நிலையில், தில்லி, என்சிஆா் பகுதியில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் பெய்த பலத்த மழையாலும், காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாகவும் காற்றின் தரத்தல் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவிவல் 240 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருகிறது. வியாழக்கிழமை அன்று காற்றின் தரக் குறியீடு 430 ஆகப் பதிவாக கடுமையான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ராஜஸ்தான் உள்ளிட்டவற்றில் வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்களிலும் பரவலாக மழை பெய்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாகவும், மலைப் பிரதேசத்தில் வீசும் காற்றின் தாக்கத்தாலும் வெப்பநிலை குறைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் மோலோட்டமான, அடா் பனிமூட்டம் இருக்கும் என்றும் கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com