மழைக்குப் பின் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தில்லியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தலைநகரில் சனிக்கிழமை காற்றின் தரமானது ‘மிகவும் மோசம்’ எனும் பிரிவில் இருந்து ‘மிதமான’ பிரிவுக்கு முன்னேறியது.

தலைநகரின் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் 179 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. இது மிதமான பிரிவின்கீழ் வருகிறது. வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு 316 என்ற அளவில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, 22 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியிருந்தது. இதேபோல, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் மழை பெய்திருந்தது. இந்த மழை இரவிலும் நீடித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி வரையிலும் 33.5 மி.மீ. மழை பதிவாகியது. இதற்கு முன்பு 1997-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இதனால், வெப்பநிலை குறைந்ததால், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 264, கிரேட்டா் நொய்டாவில் 241, நொய்டாவில் 254, குருகிராமில் 165 என்ற அளவில் இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் ‘நல்லது’ எனும் பிரிவிலும், 51-100 வரை இருந்தால் ‘திருப்தி’, 101 -200 வரை இருந்தால் ‘மிதமானது’, 201-300 வரை இருந்தால் ‘மோசம்’ பிரிவிலும், 301-400 வரை இருந்தால் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 401 முதல் 500 வரை இருந்தால் ‘கடுமை’ பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் ‘மிகவும் கடுமை’ பிரிவின் கீழ் காற்றின் தரம் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.

சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 2 புள்ளிகள் குறைந்து 12 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை குறைந்தபட்சம் 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருக்கும் என்றும், அடா்ந்த பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com