சோளம் இறக்குமதிக்கு  அனுமதி அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

கோழிப் பண்ணை விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீர்வை இல்லாமல் சோளம்

கோழிப் பண்ணை விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீர்வை இல்லாமல் சோளம் இறக்குமதிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது. 
மக்களவையில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் முன்வைத்த கோரிக்கை: 
தமிழகத்தில் ஈரோடு, கரூர், பல்லடம், பொள்ளாச்சி ஆகியவற்றுடன் சேர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் முட்டை, பிராய்லர் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் 4 கோடி முட்டைகளும், 4.5 கோடி கோழிக் குஞ்சுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
இது இந்தியச் சந்தையில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் ஆகும். தற்போது, சோளம் தட்டுப்பாடு காரணமாக தமிழகக் கோழிப் பண்ணைத் தொழில் மிகவும் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. எனவே, தீர்வை இல்லாமல் 10 லட்சம் டன் சோளம் இறக்குமதி செய்வதற்கு மத்திய விவசாயம், வர்த்தக தொழில்துறை அனுமதி அளிக்க வேண்டும். மக்களவையில் மற்ற அதிமுக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை விவரம் வருமாறு:
நீலகிரி மலை மேம்பாடு: நீலகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன்: மலைகளின் ராணி என்று அறியப்படும் ஊட்டி,சுற்றுலாப் பயணிகளின் விருப்ப இடமாக இருந்து வருகிறது. நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் வருகை தருகின்றனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் 7.11 லட்சம் மக்கள்தொகை உள்ளது. எனினும், இந்த மாவட்டத்தில் சிறப்பு மருத்துவமனை வசதி பற்றாக்குறை உள்ளது. ஊட்டி மலை ரயில் உலகப் பாரம்பரியமாகும். 
இதனால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக "ரயில் பேருந்து' (தஹண்ப் ஆன்ள்) சேவை தொடங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மேம்பாலம் வேண்டும்: திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா: திருப்பூர் மக்களவைத் தொகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 47 செல்கிறது. இச்சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், லட்சுமி நகர்- செங்கம்பள்ளி இடையே அணுகுச் சாலைகள்,மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொப்பரைக்கு ஆதரவு விலை உயர்த்தப்படுமா?: பொள்ளாச்சி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன்: கொப்பரைத் தேங்காய் ரகத்திற்கு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.140 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை கிலோவுக்கு ரூ.52.50-இல் இருந்து ரூ.95.21 ஆக உயர்த்தியது. இதை ரூ.140 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com