மக்களவையில் மத்திய அரசுக்கு நாமக்கல் எம்.பி. பாராட்டு
By DIN | Published On : 14th February 2019 01:20 AM | Last Updated : 14th February 2019 01:20 AM | அ+அ அ- |

நடுத்தர மக்களின் வரிச் சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்களவையில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பாராட்டிப் பேசினார்.
மக்களவையில் திங்கள்கிழமை "நிதி மசோதா 2019' மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு, வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச் சலுகைகள் போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட் முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துள்ளது.
மேலும், 2019-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வருமான வரிச் சட்டத்தில் பல சிறப்பான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2019-20-ஆம் ஆண்டில் தற்போதுள்ள வருமான வரிக்கு குறியீடுகள் தொடரும். அதேவேளையில், வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோரிடம் பணப்புழக்கம் அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும்.
இந்த நிதி மசோதா மூலம் தற்போது ஒரு வீடு வைத்துள்ள வருமான வரி செலுத்துவோருக்கு இரண்டு வீடுகள் வரை வைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் ஷரத்து 54-இல் திருத்தம் செய்ததன் மூலம் வருமான வரி செலுத்துவோருக்கு நீண்ட கால மூலதன லாபத்தில் ரூ.2 கோடி வரை வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தில் ஷரத்து 87ஏ-இல் திருத்தம் செய்யப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி தற்போது ரூ.2,500-இல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களின் வரிச் சுமையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரி வருவாய் ரூ. 6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.12 லட்சம் கோடியாக எட்டியுள்ளது. தமிழக முதல்வர் கூறியுள்ளபடி, இந்த இடைக்கால பட்ஜெட் விவசாயிகளின், மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாகும். தமிழகத்திலும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரு சீரிய பட்ஜெட் தமிழக துணை முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.