கூட்டணிக்கு காங்கிரஸ் மறுப்பு: கேஜரிவால் தகவல்

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட மறுத்துள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும்,

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட மறுத்துள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் "சர்வதிகாரத்தை வீழ்த்துவோம், ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் தில்லியில் புதன்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு காங்கிரஸ் கிட்டத்தட்ட மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவே கூறலாம். எனவே, தில்லியில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆம் ஆத்மி கட்சியின் முடிவுகளை ஏற்பதற்கு காங்கிரஸ் தயங்குகிறது. தில்லியில் மும்முனைப் போட்டி ஏற்படும்பட்சத்தில் வாக்குகள் சிதறும். அப்போது, தேர்தல் முடிவு பாஜவுக்குத்தான் சாதகமாக முடியும்' என்றார்.

காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் விரும்புகிறார். ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும். 
அதேநேரத்தில், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்க முன்வராத சில அரசியல் கட்சிகளின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com