எல்ஐசி முகவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எம்பிகளுடன் சந்திப்பு
By DIN | Published On : 05th January 2019 01:09 AM | Last Updated : 05th January 2019 01:09 AM | அ+அ அ- |

அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்தனர்.
இதுகுறித்து இக்கூட்டமைப்பின் அகில இந்திய தொடர்புக் குழுத் தலைவர் ஜே.கே.என். பழனி வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் கூட்டமைப்பின் (எல்ஐஏஎஃப்ஐ) பொதுச் செயலர் என். கஜபதிராவ், சங்கத்தின் அகில இந்திய அரசியல் தொடர்புக் குழு தலைவர் ஜே.கே.என். பழனி, தென் மண்டலத் தலைவர் பி.வீரணன், கேரள மாநில செயலாளர் லீலா கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் விகாஸ் பரத்வாஜ் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவை புது தில்லியில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தோம்.
அப்போது, எல்ஐசி முகவர்களின் கமிஷன் தொகையை உயர்த்துவது, பாலிஸிதாரர்களின் போனஸ் தொகையை உயர்த்துதல், பாலிஸி பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை நீக்குதல், முகவர்களுக்கு பணிக்கொடையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக, இதே கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி ஆகியோரிடமும் சந்தித்து வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜே.கே.என். பழனி கூறுகையில், "எல்ஐசி முகவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்துமாறு எம்பிகளிடம் கேட்டுக்கொண்டோம்' என்றார்.