காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? கோபால் ராய் பதில்

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்குமா, இல்லையா என்பது குறித்து கூறுவது

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்குமா, இல்லையா என்பது குறித்து கூறுவது மிகவும் கடினமாகும். எனினும், தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி தோற்கடிக்கும் என்று தில்லி அரசின் தொழிலாளர் துறை அமைச்சரும், அக்கட்சியின் தில்லிப் பிரிவு தலைவருமான கோபால் ராய் தெரிவித்தார்.
 இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், குடியிருப்பு நலச் சங்கத்தினர், மருத்துவர்கள், ஊரகப் பகுதிகளுக்கான நான்கு முன்னணி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்குமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினமாகும். தற்போதைய சூழலில் தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி தோல்வியுறச் செய்யும். காங்கிரஸ் போட்டியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தில்லி காங்கிரஸ் பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித், தில்லியில் 15 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்தார். அவருக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருந்தனர். இந்நிலையில், அவரை மீண்டும் கட்சித் தலைவராக அமர்த்தியிருப்பதன் மூலம் கட்சியில் தலைமைக்கு ஆள்கள் இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு, கூட்டணி தொடர்பான விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும்.இது தொடர்பாக தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் ஆம் ஆத்மி கட்சிப் பிரிவின் கருத்துகள் கேட்டறியப்படும்.
தில்லியில் உள்ள வாக்காளர்கள் நகரின் வளர்ச்சியில் தில்லி அரசுடன் ஒத்துழைக்க கூடிய எம்பிக்களை விரும்புகின்றனர். தற்போது இடையூறு ஏற்படுத்தி வரும் பாஜக எம்பிக்களை அவர்கள் விரும்பவில்லை. மோடி- அமித் ஷாவின் சர்வாதிகாரத்தில் இருந்து விடுபட நாட்டு மக்கள் விரும்புகின்றனர். தற்போதைய சூழலில் வெவ்வேறு மாநிலங்களின் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் அல்லது பாஜகவை தோற்கடிக்கச் செய்யும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் தோல்வியுறும். இதற்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னணி அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அக்கட்சி இதுவரை 22 முன்னணி அமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஓபிசி பிரிவு, விஜேந்தர் யாதவ் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் செயலராக ஓ.பி. சிங் இருப்பார். கிராமப்புற பிரிவின் தலைவராக சுந்தர் தன்வர் நியமிக்கப்பட்டுள்ளார். 
குடியிருப்பு நலச் சங்கப் பிரிவின் தலைவராக அஜய் ஜெயினும், மருத்துவர்கள் பிரிவின் தலைவராக ரவி சங்கர் துபேயும், நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முன்னணி அமைப்புகள் அடுத்த மாதம் முதல் கேஜரிவால் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் வளர்ச்சி யாத்திரையை மேற்கொள்ளும் என்றார் கோபால் ராய் .
காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊகங்கள் நிலவும் நிலையில், இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கிப் பேசி வருகின்றன. காங்கிரஸைப் பொருத்தமட்டில் கூட்டணி விஷயத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான குழு முடிவு செய்யும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com