தில்லி மெட்ரோ பாதுகாப்பில் கூடுதலாக 5,000 சிஐஎஸ்எஃப் வீரர்கள்! மத்திய அரசு ஒப்புதல்

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு,

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும் வகையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எஃப்) 5 ஆயிரம் பேரை கூடுதலாக பணியில் ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சுமார் 1.70 லட்சம் பேர் பணியாற்றும் துணை ராணுவப் படையாக சிஐஎஸ்எஃப் உள்ளது. இப்படையினர் நாட்டின் 61 சிவில் விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சுமார் 9 ஆயிரம் வீரர்கள் 370 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் 270 ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பானது, தில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள நொய்டா,  காஜியாபாத், குருகிராம், ஃபரீதாபாத் உள்பட  தேசிய தலைநகர் வலயப் பகுதி வரை பரவியுள்ளது.
இந்நிலையில், தில்லி மெட்ரோ பாதுகாப்புப் பணியில் கூடுதலாக 5 ஆயிரம் சிஐஎஸ்எஃப் வீரர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக  அதிகாரி  கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகம் இப்படையின் பாதுகாப்பு,  உத்தரவு கட்டமைப்பை அதிகரித்துள்ளது. ஒரு டிஐஜி அந்தஸ்து பதவியை கூடுதலாக  உருவாக்கவும் அனுமதி அளித்துள்ளது. புதிதாக நியமிக்கப்படவுள்ள வீரர்களுடன் நாட்டில் அதிக எண்ணிக்கையில்  மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை  வீரர்கள் பணியாற்றும் அமைப்பாக தில்லி மெட்ரோ திகழும்.தில்லி மெட்ரோ பாதுகாப்பு அமைப்பில் உள்ள  9 ஆயிரம் சிஐஎஸ்எஃப் வீரர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் தினசரி அல்லது அனுமதிக்கப்பட்ட அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய வழித்தடங்கள் அல்லது ரயில் நிலையங்கள் திறக்கப்படுவதன் காரணமாக வீரர்களின் தேவையை எதிர்கொள்ள உள்நாட்டுப் பாதுகாப்பு மாதிரி அல்லது வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் மற்ற வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். 
தினமும் தில்லி மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் வீரர்களைப் பணியில் அமர்த்துவதற்கு மத்திய தொழிலகப்  பாதுகாப்புப் படை மற்றும் மத்திய நுண்ணறிவு அமைப்புகள் அரசிடம் கோரியிருந்தன. இதனால், கூடுதலாக 5 ஆயிரம் வீரர்களை  தில்லி மெட்ரோவில் பணியில் அமர்த்த முழு அனுமதியை  மத்திய அரசு அளித்துள்ளது.
இதன் மூலம்,  தில்லி மெட்ரோவில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரிக்கும். வீரர்களை அதிகரிக்கும் முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால்,  நிதி ஒப்புதல் அண்மையில்தான் அளிக்கப்பட்டது.  வீரர்கள் அதிகரிப்புடன் டிஐஜி அந்தஸ்து பணியிடத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்  அவர்.
இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  "தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (டிஎம்ஆர்சி)  மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தற்போது பாதுகாப்புப் பிரிவு டிஐஜி அந்தஸ்து அதிகாரி தலைமையில் இயங்கி வருகிறது. கூடுதலாக ஒரு டிஐஜி பதவி  அளிக்கப்படும்போது,  தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பின் பல்வேறு வழித்தட செயல்பாடுகள் இரண்டாகப் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  படையின் அதிகரிக்கப்பட்டுள்ள பலம் மூலம்,  தில்லி மெட்ரோ சிஐஎஸ்எஃப் வீரர்கள் அதிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அமைப்பாக உருவாகும். தற்போது தில்லி, மும்பை ஆகிய விமான நிலையங்களில்  தலா  6 ஆயிரம் முதல் 6,500 வீரர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
தற்போது, விமான நிலையங்கள்,  விண்வெளி மையங்கள், அணு உலைப் பகுதிகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகியவற்றிலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் 27 லட்சம் பயணிகள்; தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கீழ்  270 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் 27 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து வருகின்றனர். 
தில்லி மெட்ரோவின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணியையும் சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது. பயணிகளை உடல் பரிசோதனை செய்வது,  பயணிகளின் உடைமைகளைப்  பரிசோதிப்பது போன்ற பாதுகாப்பு தொடர்புடைய பணிகளை சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com