நிலுவை நிதியை வழங்காவிட்டால்கேஜரிவால் இல்லம் முன் தர்னா: எஸ்டிஎம்சி மேயர் அறிவிப்பு

தெற்கு தில்லி மாநகராட்சிக்கான நிலுவை நிதியை தில்லி அரசு வழங்கத் தவறினால் முதல்வர் அரவிந்த கேஜரிவால் இல்லம் முன் தர்னா நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சுனிதா கங்கரா தெரிவித்துள்ளார்.


தெற்கு தில்லி மாநகராட்சிக்கான நிலுவை நிதியை தில்லி அரசு வழங்கத் தவறினால் முதல்வர் அரவிந்த கேஜரிவால் இல்லம் முன் தர்னா நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சுனிதா கங்கரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தில்லி அரசு மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய கோடிக்கணக்கான நிலுவை நிதியை இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தில்லியில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த ரூ.49 கோடியை தில்லி அரசிடம் கேட்டிருந்தோம். 
தில்லி அரசு ரூ.34.60 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால், ரூ.2.15 கோடியை மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. டெங்கு கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் 734 களப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மட்டுமே ரூ.2.75 கோடி தேவைப்படுகிறது.
தில்லியில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை  தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும். இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை நேரில் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருந்தோம். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. 
தில்லி அரசு நிதி ஒதுக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் உள்ளது. மேலும்,  கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை வாங்க முடியாமலும் உள்ளது.
இதனால், கொசுக்களால் பரவும் நோய்களை எஸ்டிஎம்சியால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகுமோ என அஞ்சுகிறேன். இன்னும் ஒரு வார காலத்துக்குள் தில்லி அரசு எஸ்டிஎம்சிக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை வழங்காவிட்டால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தர்னாவில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com