பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு விவகாரம்: விசாரணை கோரி பாஜக எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநரிடம் மனு

தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அது தொடர்பாக விசாரணை

தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலிடம் பாஜக எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.
பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் மன்ஜீந்தர் சிங் சிர்சா, ஜெகதீஷ் பிரதான், ஓ.பி.சர்மா உள்ளிட்ட குழுவினர் இந்த மனுவை அளித்தனர்.
இது தொடர்பாக விஜேந்தர் குப்தா கூறியதாவது: 
2015- 2019-இல் தில்லி அரசுப் பள்ளிகளில் 8,089 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், 2019-20-இல் 12, 748 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதாகவும் தில்லி அரசு அறிவித்துள்ளது. இதுவரை 8,089 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால், சுமார் 6,000 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எந்தவித ஆதாரங்களையும் ஆம் ஆத்மி அரசு இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மக்களுக்கு முதல்வர் கேஜரிவால் உண்மையைக் கூற வேண்டும்.
 இது தொடர்பாக சத்தர்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் நான் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டேன். அத்தொகுதியில் 98 வகுப்பறைகளைக் கட்டியுள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில் பள்ளிகளில் 56 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வகுப்பறைகள் கட்டப்பட்டதில் சுமார் 40 சதவீதம் பணம் கூடுதலாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிடுவதாக துணைநிலை ஆளுநர் உறுதியளித்தார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com