ரோந்து பணிகளில் காவல் உயர் அதிகாரிகள்: துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவு

ரோந்து பணிகளில் பங்கேற்க வேண்டும் என்று தில்லி காவல் உயர் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளார்.

ரோந்து பணிகளில் பங்கேற்க வேண்டும் என்று தில்லி காவல் உயர் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் தில்லியில் உள்ள தெருக்களில் நிகழும் பல்வேறு வகையான குற்றங்களை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் தலைமையில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் தில்லி தலைமைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை), தில்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தில்லியில் உள்ள தெருக்களில் நிகழும் பல்வேறு வகையான குற்றங்களின் வகைகள், அவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வுக் கூட்டத்தில் தில்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (குற்றப்பிரிவு) விளக்கம் அளித்தார்.
குறிப்பாக குற்றவாளிகளை அடையாளம் காணுதல், தவறான குணமுடையோர், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள், பரோல், ஜாமீனில் வெளியில் உள்ள குற்றவாளிகள் ஆகியோர் குறித்த தகவல்கள் அவ்வப்போது ஆராயப்படுவதையும், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் திடீர் வாகனச் சோதனைகள் நடத்தப்படுவதையும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சங்கிலி பறிப்புக்கு எதிரான பிரிவு அமைக்கப்பட்டுள்ளதையும், தொடர்ந்து ரோந்து பணியில் உள்ளோர், காவல்துறைக்கு தகவல் அளிப்போர் ஆகியோர் தொடர்பில் இருப்பதையும் எடுத்துரைத்தார். 
தில்லியின் வடக்கு மண்டலத்தில் 29, தெற்கு மண்டலத்தில் 35 என மொத்தம் 64 சாலைகள், தெருக்கள் குற்றங்களுக்கு எளிதாக நடைபெறுபவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மதுரா ரோடு - ஆஸ்ரம் செளக், லாலா லஜ்பத் ராய் சாலை, சிக்னேச்சர் பாலம் - போபுரா பார்டர், ராணி ஜான்சி ரோடு, ஜஎஸ்பிடி கஷ்மீரி கேட்-கஸ்லா கல்லூரி ஆகிய சாலைகளில் பிசிஆர் வேன்கள் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இரவு 10 முதல் அதிகாலை 3 மணி வரை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன என்பதை தில்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (குற்றப்பிரிவு) விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பேசுகையில், "தெருக்கள், சாலைகளிலும், குடியிருப்பு காலனிகளில் காவல்துறையினர் நடமாட்டத்தையும், பைக்குகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியையும் அதிகரிக்க வேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com