தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தில்லியில் நைஜீரியர் கைது

மூலிகை ஆயிலை கொள்முதல் செய்து ஏற்றுமதி மூலம் பெரும் பணம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி,

மூலிகை ஆயிலை கொள்முதல் செய்து ஏற்றுமதி மூலம் பெரும் பணம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை தில்லி போலீஸார் கைது செய்தனர். 
இதுகுறித்து தில்லி இணையதளக் குற்றப் பிரிவு காவல் துணை ஆணையர் அன்யேஷ் ராய் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தின் வேலூர் பகுதியைச் சேர்ந்தவர், தில்லி இணையதளக் குற்றப் பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில், சம்பவத்தன்று லிங்க்டுஇன் சமூகதளத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தான் கானா நாட்டில் உள்ள ஒரு விலங்குகள் நல உயிரியல் நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளராக வேலை செய்து வருவதாகவும், ஒரு அருமையான வியாபார வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஃபோலினிக் பி12 எனும் மூலிகை மருந்து, பந்தயக் குதிரைகளுக்கு தடுப்பூசி தயாரிக்க தேவைப்படுவதாகவும், இந்த தயாரிப்புகளை கானா நாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என்றும், அந்தத் தயாரிப்பை இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள் மஹாவிர் ஹெர்பல் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இந்த ஆயில் மிக மலிவான விலையில் கிடைப்பதாகவும், இந்த ஆயிலை தானே தனது நிறுவனத்திற்காக அதிக விலைக்கு வாங்கிக் கொள்வதாகவும் புகார்தாரரிடம் அந்த நபர் கூறியுள்ளார். மேலும், அவரே மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறும் ஆலோசனை கூறியுள்ளார். இதையடுத்து, கானாவில் உள்ள விலங்குகள் நல உயிரியல் நிறுவனத்தையும், இந்தியாவில் உள்ள மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்தையும் புகார்தாரர் தொடர்பு கொண்டார். அப்போது, கானா நாட்டு நிறுவனத்தினர் ஒரு லிட்டர் எண்ணெய்யை ரூ. 45 லட்சத்துக்கு வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர். அதேபோல, அந்த ஆயிலை ரூ.25 லட்சத்துக்கு விற்பதாக புகார்தாரரிடம் மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதில் திருப்தி அடைந்த புகார்தாரர் இதற்கான வியாபாரத்தில் ஈடுபட சம்மதித்தார். அதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபர் புகார்தாரரை நேரில் சந்தித்து அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து, ஆயில் மாதிரியை தனக்கு அனுப்புமாறு மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்திடம் புகார்தாரர் கூறியுள்ளார். அதன்படி, அவருக்கு கூரியர் தபாலில் 5 மி.லி . ஆயில் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. அதை தில்லியில் உள்ள கனாட் பிளேஸில் ஒரு காபி ஷாபில் வைத்து புகார்தாரர் குற்றம்சாட்டப்பட்ட நபருக்குத் தந்தார். உடனடியாக அந்த ஐந்து மி.லி. ஆயிலுக்கு ரூ.86 ஆயிரத்தை புகார்தாரருக்கு அவர் அளித்தார். இதையடுத்து, புகார்தாரரின் நம்பிக்கையை குற்றம்சாட்டப்பட்ட நபர் முழுமையாகப் பெற்றார். இந்நிலையில், தனக்கு 1 லிட்டர் ஆயில் வேண்டும் என அவர் புகார்தாரரிடம் மோசடி நபர் கேட்டார். இதையடுத்து, புகார்தாரர் ரூ.25 லட்சம் தொகையை மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்திற்கு அனுப்பி அந்த ஆயிலைப் பெற்றார். அதன்பிறகு புகார்தாரரைச் சந்திப்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் தவிர்த்தார். இதையடுத்து, சந்தேகமடைந்த புகார்தாரர், அந்த ஆயில் கவரை திறந்து பார்த்த போது அதில் தேன் இருப்பது தெரிய வந்தது என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மோசடி நபர் கிரேட்டர் நொய்டாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அங்கு கைது செய்யப்பட்டார். அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கில்பர்ட் ஒகோயே பெட்ரோ (39) என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து ஐந்து செல்லிடப்பேசிகள், ஒரு மடிக் கணினி, கடவுச்சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் 2010-இல் வணிக நுழைவு இசைவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் நைஜீரியாவுக்கு திரும்பிச் செல்லவில்லை.
அவருக்கு கணினி, இணையதள திறன் இருந்ததால் பல்வேறு சமூகவலைதளம் மூலம் சந்தேகம் ஏற்படாத வகையில் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார். மேலும், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலிப் பெயரில் ஃபோலினிக் பி12 என அழைக்கப்படும் ஆயில் தொடர்புடைய மஹாவீர் ஹெர்பல் தனியார் நிறுவனம், விலங்குகள் நல உயிரியல் நிறுவனம் ஆகிய பெயர்களில் இணையதள நிறுவனங்களைத் தொடங்கினார். இதன் மூலம் பலரையும் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.1.25 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், நுழைவு இசைவு காலாவதியாகிவிட்ட நிலையிலும் 9 ஆண்டுகளாக இந்தியாவிலேயே சட்டவிரோதமாக இருந்துள்ளார். இவரது கூட்டாளிகளைக் கைது செய்யும் வகையில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் காவல் உயரதிகாரி அன்யேஷ் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com