நிஜாமுதீன் தர்கா வளாகத்திற்குள் சட்டவிரோத கட்டுமானம்: இந்திய தொல்லியல் துறை புகார்

நிஜாமுதீன் தர்கா வளாகத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) புகார் அளித்துள்ளது. 

நிஜாமுதீன் தர்கா வளாகத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) புகார் அளித்துள்ளது. 
இதுகுறித்து ஏஎஸ்ஐ மூத்த அதிகாரி கூறியதாவது: தெற்கு தில்லியில் உள்ள பாரம்பரியமிக்க நிஜாமுதீன் தர்கா இந்திய தொல்லியல் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தர்கா வளாகத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒளலியா புனிதத் தலம் உள்ளது. இது புகழ்பெற்ற சூஃபி தர்காவாகும். மேலும், இங்கு வரலாற்றுச் நினைவுச்சினங்களாக படிக் கிணறு, கல்லறைகள் அமைந்துள்ளன. இந்த வளாகத்திற்குள் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. இது மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால், எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகாரில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸிடம் ஏஎஸ்ஐ கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில், "இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து காவல் துறைக்குப் புகார் வரப் பெற்றுள்ளது. இந்த விவகாரம் குறித்து கவனிக்கப்படும்' என்றார்.
நிஜாமுதீன் தர்கா வளாகமானது இந்திய தொல்லியல் துறையின் தில்லி வட்டத்தின் கீழ் வருகிறது. இந்த தர்காவுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இந்த தர்கா ஹூமாயூன் கல்லறை வளாகம் அருகே அமைந்துள்ளது. இந்த கல்லறை யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் தில்லி வட்டத்தின் வரம்பில் சுமார் 100 நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com