வீட்டுமனை வழங்குவதாக பலரிடம் மோசடி: பான்ட்டி சத்தாவின் மகன் தில்லியில் கைது

வீட்டுமனை (பிளாட்) வழங்குவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில்

வீட்டுமனை (பிளாட்) வழங்குவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், மறைந்த மதுபான தொழிலதிபர் பான்ட்டி சத்தாவின் மகன் மன்ப்ரீத் சிங் சத்தாவை தில்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 
இதுகுறித்து தில்லி மந்திர் மார்க் பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் சுவஷிஷ் சௌத்ரி தெரிவித்ததாவது: 
தில்லியைச் சேர்ந்த கே. ரமேஷ் மற்றும் சிலர் தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி, சௌத் எக்ஸ்டென்ஸன் பகுதியில் செயல்படும் "உப்பல் சத்தா ஹை-டெக் டெவலப்பர்ஸ் நிறுவனம்' 2006-இல் பிளாட் (மனைகள்) அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை எண் 24-இல் உள்ள காஜியாபாதில் தொடங்கியது. மேலும், திட்டம் தொடங்கப்பட்ட 8 மாதங்களில் பணம் செலுத்தியோருக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பலர் மனை வாங்குவதற்காக பணம் செலுத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம், சொன்னபடி மனையை வழங்கவில்லை. இதையடுத்து, 28 பேர் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், 2011-இல் புகார்தாரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் புதிய நிறுவனமான "வேவ் சிட்டி என்எச் 24'-இல் பணத்தைத் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், உப்பல் சத்தா ஹைடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக 30.11.05-இல் காஜியாபாத் வளர்ச்சி ஆணையத்திடம் (ஜிடிஏ) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும், மனைகளுக்காக புகார்தாரர்களிடமிருந்து தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெறப்பட்டுள்ளது. எனினும், இடத்திற்கான பிளானுக்கு 2.11.2013-இல் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பணம் அளித்தவர்களுக்கு பிளாட்டுகளும் வழங்கப்படவில்லை; பணமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய உப்பல் சத்தா ஹைடெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் - இயக்குநர் மன்ப்ரீத் சிங் சத்தா தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்வதாக தில்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஃபுகேட் செல்லவிருந்தார். அவர் வேறு ஒரு மோசடி வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் உயரதிகாரி சௌத்ரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com