ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனோஜ் திவாரி வேண்டுகோள்
By DIN | Published On : 18th June 2019 06:53 AM | Last Updated : 18th June 2019 06:53 AM | அ+அ அ- |

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் பொய்யான வாக்குறுதிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் நம்பக் கூடாது என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார். ஆனால், இவற்றில் எந்தவொரு வாக்குறுதியையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், மேலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களைத் தவறாக வழிநடத்தி வருகிறார். தில்லியில் ஆட்டோ கட்டணத்தை அதிகரித்ததன் மூலம் ஆட்டோ சேவைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துள்ளார். ஆட்டோ கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதை விட்டு ஓலா, ஊபர் போன்ற செயலி வழி இயங்கும் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆட்டோ மீட்டர் அமைப்பதற்கான செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் தில்லி முதல்வரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பக் கூடாது. அவர், ஊபர், ஓலா ஆகிய செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்வதன் மூலம் தில்லியில் ஆட்டோ சேவையை அழிக்கும் முயற்சியில் கேஜரிவால் ஈடுபட்டுள்ளார் என்று அறிக்கையில் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.