கோவையில் 3 ஆயிரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 18th June 2019 06:53 AM | Last Updated : 18th June 2019 06:53 AM | அ+அ அ- |

கோவையில் நடைபெற்ற மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள இளநிலை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைக் கண்டித்து கடந்த ஒருவார காலமாக நாடுமுழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற போதும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, முக்கியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
புறநோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமே பாதிக்கப்பட்டன.
இதில் இந்திய மருத்துவ சங்க கோவை மாவட்ட தலைவர் பி.மாரியப்பன், அகில இந்திய தனியார் மருத்துவமனைகள் சங்க துணைத் தலைவர் ஏ.க.ரவிகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.