சட்டப் பேரவைத் தேர்தல்: தில்லியில் கள ஆய்வு நடத்த பாஜக முடிவு

எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தில்லியில் கள ஆய்வு மேற்கொள்ள பாஜக தலைமை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தில்லியில் கள ஆய்வு மேற்கொள்ள பாஜக தலைமை தீர்மானித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக சுமார் 55 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றது. இதேபோன்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் தில்லி பாஜக ஈடுபட்டுள்ளது. 
அந்த வகையில், தில்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வேட்பாளர்களைத் தேர்வு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கள ஆய்வுகளில் தில்லி பாஜக ஈடுபடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 இது தொடர்பாக தில்லி பாஜக பொதுச் செயலர் சித்தார்த்தன் கூறியது: 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், 
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மகாராஷ்ட்ரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுடன் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலும் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். 
மேலும், தில்லியில் நிலவும் மக்கள் பிரச்னைகள், வேட்பாளர் தேர்வு ஆகியவை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளோம். தொகுதி வாரியாக மக்கள் செல்வாக்குள்ள புதிய வேட்பாளர்களை களம் இறக்குவது தொடர்பாகவும் விவாதித்து வருகிறோம். 
தில்லியில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இல்லை. தில்லியில் ஆட்சியைப் பிடிப்பது முக்கியமானது என பாஜக தலைமை கருதுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com