குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு ஆகியவற்றைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் சார்பில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு ஆகியவற்றைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் சார்பில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
சங்கம் விஹாரில் உள்ள ரதியா மார்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறையால் ஏழைகள், குழந்தைகள், பெண்கள் என பலதரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண ஆம் ஆத்மி அரசால் முடியவில்லை. இது வாழ்வா சாவா பிரச்னையாகும். கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தில்லி அரசு தூக்கத்தில் உள்ளது' என்றார்.
நபி கரிம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹாரூண் யூசுஃப் பேசுகையில், "குடிநீர் பற்றாக்குறையால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக மக்கள் பல நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது' என்றார்.
கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராஜேஷ் லிலோத்யா பேசுகையில், "நிரந்தரக் கட்டணம் என்ற பெயரில், தில்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளன. இருப்பினும், மின்வெட்டு பிரச்னை நீடிக்கிறது. இதனால், கோடை காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்' என்றார்.
 திலக் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், "கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர யாதவ் பங்கேற்றுப் பேசுகையில், "மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறைப் போன்ற பிரச்னைகள் குறித்து ஆம் ஆத்மி அரசு அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வரை, இதுபோன்ற போராட்டங்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்தும்' என்றார். 
குடிநீர் பற்றாக்குறை, மின் வெட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் கேஜரிவாலை ஷீலா தீட்சித் அண்மையில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.
 


15 ஆண்டுகளில் செய்ய முடியாததை நான்கரை ஆண்டுகளில் செய்துள்ளோம்
தில்லியில் தண்ணீர் பற்றாக்குறை, மின்வெட்டு பிரச்னைகளுக்கு கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸால் செய்ய முடியாததை ஆம் ஆத்மி அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அவரது 15 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார் என்பதை அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 15 ஆண்டுகால ஆட்சியில் அவரால் செய்ய முடியாததை ஆம் ஆத்மி அரசு நான்கரை ஆண்டில் செய்துள்ளது. அதிக மின் கட்டணத்தின் காரணமாக தில்லியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com