சாமியார் ராம் ரஹீமுக்கு பிணை வழங்கக் கூடாது: ஸ்வாதி மாலிவால் எதிர்ப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மித் ராம் ரஹீமுக்கு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மித் ராம் ரஹீமுக்கு பிணை வழங்கக் கூடாது என்று தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்லாதி மாலிவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் உள்ள தேரா சச்சா செளதா மதப் பிரிவின் தலைவர் குர்மித் ராம் ரஹீம். அவரது மத அமைப்பில் பல லட்சம் பேர் அங்கம் வகிக்கின்றனர். 
இந்நிலையில், அவர் மீது கடந்த 2002-இல் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 2017-இல் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அவர் ஹரியாணா மாநிலம், ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்தத் தீர்ப்பை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 
கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அவர் தற்போது பாலியல் வழக்கில் 10 வருடம், கொலை வழக்கில் 10 வருடம் என 20 வருடச் சிறைத் தண்டனையில் உள்ளார்.
இந்நிலையில், தான் விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 42 நாள்கள் பிணை வழங்க வேண்டும் என்றும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு ராம் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார். 
இது தொடர்பாக சிர்சா மாவட்ட நிர்வாகத்துக்கு சிறைக் கண்காணிப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில், சிறையில் குர்மித்தின் நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குர்மித் ராம் ரஹீமுக்கு பிணை வழங்கக் கூடாது என்று தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்லாதி மாலிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்கிழமை கூறுகையில், "ராம் ரஹீம் பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளது வெட்கக் கேடானது. கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவருக்கு பிணை வழங்கக் கூடாது. அவருக்குப் பிணை கிடைக்காது என நம்புகிறேன். இறைவனின் பெயரால் பல கொடிய குற்றங்களைச் செய்த அவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com