மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி

பிகார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று

பிகார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று பாஜக அதிருப்தி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
லக்னௌவில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவை சத்ருகன் சின்ஹா சந்தித்துப் பேசினார். இதனால் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூணம் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தொகுதியான லக்னௌவில் போட்டியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கேள்விக்கு சத்ருகன் சின்ஹா பதிலளிக்கையில், "அதை மறுக்கவோ, உறுதி செய்யவோ இயலாது. பூணம் சின்ஹா தனது பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனினும், காலம்தான் அதை முடிவு செய்யும்' என்றார்.
அகிலேஷ் யாதவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியின் சார்பில் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று சமாஜவாதி, பகுஜன் சமாஜ்  கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதேநேரத்தில், ராகுல் காந்தியின் அமேதி தொகுதி, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதி ஆகியவற்றில் போட்டியிடுவதில்லை என்றும் அக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. 3 தொகுதிகளை ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளன.
பாஜக அதிருப்தி எம்.பி.யான சத்ருகன் சின்ஹா, மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதை மனதில் கொண்டே, எந்த சூழ்நிலை வந்தாலும், பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com