பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தில்லியில் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து தில்லியில் வெவ்வேறு அமைப்புகள் சார்பில் இரு வேறு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து தில்லியில் வெவ்வேறு அமைப்புகள் சார்பில் இரு வேறு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 
சாணக்கியபுரியில் அமைந்துள்ள தில்லி தமிழ்நாடு இல்லம் அருகே இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், தமிழக அரசே வெட்கம், பெண்களுக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் ஆனி ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவங்களால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்தச் சம்பவம் ஆட்சி அதிகாரத்தின் ஆதரவு, காவல் துறையின் ஆதரவு இல்லாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. பொள்ளாச்சி  மாவட்டக்  காவல் கண்காணிப்பாளரின் மழுப்பலான பதிலும் இதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை தடுத்து நிறுத்த முடியாத தமிழக அரசு உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தில்லி தமிழ் மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சரவண ராகுல் கூறுகையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவமானமாகும் . தமிழகத்தில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்ளக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மகளிர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com