எம்.ஜி. ரோடு பகுதி கீழ்மட்டச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

இஃப்கோ சௌக் பகுதியின் எம்.ஜி. ரோடில் புதிதாக அமைக்கப்பட்ட கீழ்மட்டச்சாலை

இஃப்கோ சௌக் பகுதியின் எம்.ஜி. ரோடில் புதிதாக அமைக்கப்பட்ட கீழ்மட்டச்சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது. 
மெஹ்ரெளலி - குருகிராம் சாலை பகுதியில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலைத் திட்டமானது, ராஜீவ் சௌக், மஹாரானா பிரதாப் சௌக், இஃப்கோ சௌக், சிக்னேச்சர் டவர் ஆகிய நான்கு சந்திப்புகளில் கீழ்மட்டச் சாலை மற்றும் மேம்பாலங்களின் கட்டுமானத்தின் ஒரு பகுதியாகும்.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் திட்ட இயக்குநர் அசோக் சர்மா கூறியதாவது: 
இஃப்கோ சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் வணிக வளாகத்திற்கு செல்லும் வகையில் ரூ.23 கோடியில் இந்த கீழ்மட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 8 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் 150 வாட்ஸ் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 
இந்தச் சாலையில் இருந்த பெட்ரோல் நிலையத்தை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையைத் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இச்சாலை திறக்கப்பட்டதன் மூலம் எம்.ஜி. ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இஃப்கோ மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் இருந்து வரக் கூடிய போக்குவரத்து தற்போது தில்லி நோக்கி வலதுபுறம் செல்வதற்கு இந்த கீழ்மட்டச் சாலையைப் பயன்படுத்த முடியும். முன்பு, போக்குவரத்தானது எம்.ஜி. ரோடு பகுதியில் இடதுபுறம் செல்லவேண்டியிருந்தது. பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு வலது புறம் திரும்பி வரவேண்டியிருந்தது. 
இதன்காரணமாக எம்.ஜி. ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வந்தது. இரண்டு வலதுபுற திருப்ப மேம்பாலங்கள் அமைக்கப்பட்டதால், இஃப்கோ சௌக் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்கெனவே குறைந்தது. 
தற்போது உள்ள இஃப்கோ சௌக் மேம்பாலத்தின் வழியாகச் செல்லும் ஒரே திசையிலான இணை மேம்பாலம் இந்த மாதம் இறுதியில் திறந்துவிடப்பட உள்ளது. அதன் மூலம் ஓட்டுமொத்த திட்டப் பணியும் நிறைவு பெறும் என்றார் அந்த அதிகாரி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com