ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!: ஆய்வறிக்கையில் தகவல்
By DIN | Published On : 01st May 2019 07:34 AM | Last Updated : 01st May 2019 07:34 AM | அ+அ அ- |

தில்லியில் கடந்த 2015 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, மாநில அரசுகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தில்லியில், கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. "துரோகத்தின் கதை" என்று பெயரிடப்பட்ட அந்த அறிக்கையை, அமைப்பின் இயக்குநர்கள் வினய் சஹஸ்ரபுத்தே, சுமீத் பஷின் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் வினய் சஹஸ்ரபுத்தே கூறியதாவது: கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 70 முக்கிய வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இதில், 67 வாக்குறுதிகள் முமுழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு, அரசியல் போட்டி காரணமாக தில்லியில் அமல்படுத்தவில்லை. கல்வியைப் பொருத்தவரையிலும், தில்லியில் 500 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வெறும் 5 சதவீத பள்ளிகள் அதாவது 25 புதிய பள்ளிகளில் மட்டுமே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் 20 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்பப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்று ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரக் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், தில்லியில் குறைந்தளவு மின்சாரக் கட்டணம், நிலையான கட்டணம் ஆகியவை அதிகரித்துள்ளன. இதனால், தில்லியில் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது.
தில்லியில் குடிநீர் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக அதிகரித்துள்ளது. கழிவு நீர் கலந்த குடிநீர் பெறுபவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேபோல, லோக் பால், பொதுக் கழிப்பிடங்கள், சிசிடிவி கண்காணிப்புக் கேமரா, பெண்கள் பாதுகாப்பு, வை-ஃபை வசதி, காற்று மாசுவைக் கட்டுப்படுத்துதல், வீட்டு வசதித் திட்டம், போதைப் பொருளைத் தடுத்தல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, துப்புரவுத் தொழிலாளர்கள் மேம்பாடு, விளையாட்டு, முழு மாநில அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார் அவர்.