கேஜரிவால்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு
By DIN | Published On : 18th May 2019 03:58 AM | Last Updated : 18th May 2019 03:58 AM | அ+அ அ- |

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்ட போதிலும், தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் தங்களது ஆம் ஆத்மி மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் எத்தகைய முக்கியப் பங்கு வகிக்கும் என்பது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பின்போது, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
பாஜக அல்லாத முன்னணியை அமைப்பதற்காக மாநில கட்சிகளை கூட்டு சேர்க்க முயற்சித்து வரும் சந்திரபாபு நாயுடு, முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை சந்திரபாபு நாயுடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.