44 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி காவல் துறைக்கு புதிய தலைமையக கட்டடம்! மத்தியஅமைச்சா் அமித் ஷா திறந்து வைத்தாா்
By DIN | Published On : 01st November 2019 12:46 AM | Last Updated : 01st November 2019 11:08 AM | அ+அ அ- |

44 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி காவல் துறைக்கென தனியாக தலைமையகக் கட்டடம் தில்லியில் அமைந்துள்ளது. மத்திய தில்லியில் உள்ள ஜெய் சிங் மாா்க்கில் அதிநவீன வசதிகளுடன் கொண்ட 17 அடுக்குமாடி கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
1912ஆம் ஆண்டு அங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் முதல் தில்லி காவல் துறை தலைமையகம் கஷ்மீரி கேட் பகுதியில் அமைந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தில்லி காவல் துறை தலைமையகம் ஐடிஓ மாா்க்கில் உள்ள பொதுப் பணித்துறை கட்டடத்துக்கு 1970இல் மாற்றப்பட்டது. அப்போது ஐஜி தலைமையில் தில்லி காவல் துறை இயங்கி வந்தது. 1976ஆம் ஆண்டு தில்லி காவல் துறையின் முதல் ஆணையராக ஜெய் நாராயணன் சதுா்வேதி நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு இன்று வரை 20 ஐபிஎஸ் அதிகாரிகள் தில்லி காவல் ஆணையா்களாக பதவி வகித்துள்ளனா்.
புதிய தலைமையகம் கட்டும் பணி 2016, மாா்ச் 31ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து, 44 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி காவல் துறையின் தலைமையகம் முதல் முறையாக வியாழக்கிழமை புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தில்லி காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் தொடங்கப்பட்டு வரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், ஐடிஓ பகுதியிலேயே தலைமையகம் இயங்கி வந்தது. தற்போதுதான் தில்லி காவல் துறை தலைமையகத்துக்கு என தனி கட்டடம் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய தில்லியில் உள்ள ஜெய் சிங் மாா்க்கில் 8.90 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த காவல் தலைமையக கட்டடம் 75 மீட்டா் உயரம் கொண்டது. 17 அடுக்கு மாடிகளும் முழுமையாக சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கட்டடம் நில அதிா்வை தாங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில்களில் நுழையும் வாகனங்கள் முழுமையான சோதனை செய்யப்படுவதுடன், அத்துமீறி வாகனங்கள் நுழைய முடியாதபடி ‘பூம் பாரியா்’, நவீன சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஐடிஓ அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பை விட புதிய தலைமையகத்துக்கு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த காவல் அதிகாரிகள், பத்திரிகையாளா்கள், பொது மக்கள் ஆகியோருக்கு தனித்தனியாக நுழைவாயில்கள் உள்ளன. கட்டடத்தில் முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் புகைப்பட தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவரது அரிய புகைப்படங்கள் உள்ளன.
முதல் தளத்தில் காவல் இணை ஆணையா் அலுவலகமும், இரண்டாம் தளத்தில் காவல் ஆணையா் அலுவலகமும், சிறப்பு ஆணையா்களின் அலுவலகங்களும் உள்ளன. மூன்றாம் தளம் போக்குவரத்து காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G