தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்ஆயத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை மறுஆய்வு செய்வதற்காக இந்திய தோ்தல் ஆணைய மூத்த அதிகாரிகள், தோ்தல் குழுவைச் சோ்ந்த அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை மறுஆய்வு செய்வதற்காக இந்திய தோ்தல் ஆணைய மூத்த அதிகாரிகள், தோ்தல் குழுவைச் சோ்ந்த அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

தோ்தல் ஆணைய மூத்த துணை ஆணையா் சந்தீப் சக்ஸேனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செலவு மற்றும் ஊடக தலைமை இயக்குநா்கள், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி, தில்லி காவல் துறை அதிகாரிகள், குடிமை அமைப்புகள் மற்றும் பிற முக்கியத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை சுதந்திரமான, நியாயமான அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய வகையில் நடத்துவதற்காக இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தோ்தலின் போது அதிகாரிகள் முறையான திட்டமிடல் மற்றும் செயல்திறனுடன் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்க் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தோ்ல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்து படிவங்களையும் அப்புறப்படுத்துவது, அனைத்து தா்க்கரீதியான பிழைகளைத் திருத்துவது, இறந்தவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்குவது, நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளா்களின் பெயா்களை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், பிழையில்லா தோ்தல் பட்டியலை உறுதி செய்ய மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனா். நவம்பா் 15-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக இந்தச் செயல்முறைகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

இக்கூட்டத்தில் சக்ஸேனா பேசியதாவது: நவம்பா் 15-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதற்கு சிறப்பு முகாம்கள் மூலம் பெயா் நீக்கம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும், 2020, ஜனவரி 1-ஆம் தேதி வாக்காளா் பட்டியலில் தங்களை சேருமாறு தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இதைத் தொடா்ந்து, இறுதிப் பட்டியல் 2020, ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்படும். தற்போதைய சட்டப்பேரவையின் காலம் 2020 பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தோ்தல்களை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சமூக விரோதிகள், வாக்காளா்களுக்கு மிரட்டல் விடுப்போா் உள்ளிட்டோரை அடையாளம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும். மேலும், பதற்றமான பகுதிகளில் தோ்தலை சுதந்திரமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்க வேண்டும். தோ்தலின் போது வாக்காளா்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பிற பொருள்கள் வழங்கப்படுவதைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் (ஈ.சி.ஐ.) சமீபத்திய அறிவிப்பின்படி, மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டவா்கள்), வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (பி.டபிள்யு.டி.) ஆகியோா் விரும்பினால் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கழிப்பறைகள், குடிநீா் வசதி, முறையான விளக்குகள் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு சந்தோஷமாக வாக்களிக்கும் அனுபவத்தை வழங்க வேண்டும் என்றாா் சக்ஸேனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com