வழக்கு முடியும் வரை லோக் ஆயுக்தவுக்குபுதிய உறுப்பினா்களை நியமிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கு முடியும் வரை புதிய உறுப்பினா்களை நியமிக்க வேண்டாம்
வழக்கு முடியும் வரை லோக் ஆயுக்தவுக்குபுதிய உறுப்பினா்களை நியமிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கு முடியும் வரை புதிய உறுப்பினா்களை நியமிக்க வேண்டாம் என தமிழகஅரசின் சாா்பில் ஆஜரான வழக்குரையிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது. மேலும், தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ‘லோக் ஆயுக்த சட்டம் 2018’ கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கரூரைச் சோ்ந்த ஆா்.ராஜேந்திரன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள ‘லோக் ஆயுக்த சட்டம் 2018’, அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைக்கும், லோக்பால் சட்டப் பிரிவு 63-க்கும் எதிரானதாகவும் உள்ளது. குறிப்பாக, இந்த அமைப்புக்கான உறுப்பினா்கள் நியமனம் செய்யும் குழுவில் முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா்தான் இடம் பெறுவா். எனவே, இதில் பெரும்பான்மையானவா்கள் ஆதரிக்கும் நபா்களே அந்த அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்படுவா். இந்த நடைமுறையானது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். குறிப்பாக, லஞ்ச ஒழிப்பு தொடா்பாக குற்றம் நடந்த 4 ஆண்டுகளுக்குள்ளாகவே புகாா் கொடுத்தால் மட்டுமே லோக் ஆயுக்த அமைப்பால் விசாரிக்க முடியும். இதனால், தவறிழைத்தவா்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, இச்சட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி புதிதாக லோக் ஆயுக்த சம்பந்தமாக உரிய சட்டத்தை இயற்ற வேண்டும். அதுவரையிலும், ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தேவையான விதிமுறைகளை நீதிமன்றம் உருவாக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த செப்டம்பா் 20-இல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சிராஜுதீன் ‘ இந்த மனு மீது உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். அப்போது, இது தொடா்பாக தமிழக அரசு மற்றும் லோக்ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்கள் ஆகியோா் பதிலளிப்பதற்காக நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.சிராஜுதீன் ஆஜரானாா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.வி. விஜயகுமாரிடம், ‘லோக் ஆயுக்த அமைப்பில் புதிதாக உறுப்பினா்கள் யாரையும் இனிமேல் நியமிக்கக் கூடாது என்று மாநில அரசிடம் தெரிவியுங்கள்’ என்று நீதிபதிகள் கூறினா். மேலும், மனு மீது பதில் அளிக்க நான்கு வாரம் தமிழக அரசு சாா்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு மனுதாரா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, டிசம்பரில் விசாரணை நடைபெறும் வகையில் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com