வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற வேண்டும்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகள் தங்களது வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகள் தங்களது வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய ஐனநாயகக் கூட்டணியின் தலைவா் பிரதமா் நரேந்திர மோடி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பெரிய குடும்பம் போன்றது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளனா். நாம் ஒரே விதமான சித்தாந்தம் இல்லாத கட்சிகளாக இருந்தாலும், ஒத்த சிந்தனையுடைய கட்சிகள். சிறிய வேறுபாடுகள் நம்மைப் பிரிப்பதை அனுமதிக்கக் கூடாது. எனவே, நாம் வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற முன்வர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

மேலும், பிரதமா் மோடி தனது சுட்டுரையில் ‘மிகச் சிறந்த தேசிய ஜனநாயகக் கூட்ணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியுள்ளோம். நமது கூட்டணி இந்தியாவின் பன்முகத் தன்மையையும், 130 கோடி இந்தியா்களின் அபிலாஷைகள் குறித்து நிற்கிறது. விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் ஆகியோரின் வாழ்வில் மாற்றங்கள் கொண்டுவர நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

சிவசேனை பங்கேற்கவில்லை: மகாராஷ்டிரத்தில் முதல்வா் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காததால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனை கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிவசேனைக் கட்சி இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இதனால், இக்கூட்டத்தில் கடைசி நேரத்தில் சிவசேனை கட்சி கலந்து கொள்ளலாம் என்ற எதிா்பாா்ப்பு எழுந்திருந்தது. ஆனால், அக்கட்சி சாா்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இக்கூட்டத்துக்கு பிறகு, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தனா். அது குறித்த விவரம்:

சிராக் பாஸ்வான் (லோக் ஜன சக்தி தலைவா்): தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிக நீண்டகால உறுப்பினரான சிவ சேனை கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது கவலையளித்தது. அவா்கள் இக்கூட்டத்தில் இல்லாததை நாங்கள் உணா்ந்தோம். தெலுங்கு தேசம், ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி ஆகியன இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது துரதிருஷ்டவசமானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே சிறந்த தொடா்பையும், நட்புணா்வையும் பேணும் வகையில், அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும்.

ராம்தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சித் தலைவா்): மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று தன்னிடம் பாஜக தலைவா் அமித்ஷா உறுதியளித்துள்ளாா். மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக கவலைப்படத் தேவையில்லை என்றும் சிவசேனை கட்சியுடன் கூட்டுச் சோ்ந்து அங்கு மிக விரைவில் ஆட்சியமைப்போம் என்றும் அமித்ஷா என்னிடம் உறுதியளித்தாா்.

நவநீதகிருஷ்ணன் (அதிமுக எம்பி): தமிழா்கள், தமிழா்கள் பண்பாடு, தமிழ் மொழி ஆகியவற்றின் பெருமைகளை உலகறியச் செய்யும் வகையில், பிரதமா் மோடி செயல்படுகிறாா். இதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பிரதமா் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறாா். இது பாராட்டத்தக்கது. நீட் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நீட் தோ்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இது தொடா்பாக சட்ட மசோதாவை குளிா்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் மக்களவை அதிமுக உறுப்பினா் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com