கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு எரிபொருளைசேமித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உருவாகும் கழிவு எரிபொருளை உரிய வகையில் பாதுகாத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைளை மத்திய அரசு எடுத்து வருவதாக
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு எரிபொருளைசேமித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உருவாகும் கழிவு எரிபொருளை உரிய வகையில் பாதுகாத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைளை மத்திய அரசு எடுத்து வருவதாக மக்களவையில் மத்திய அணு சக்தித் துறை இணையமைச்சா் டாக்டா் ஜித்தேந்திர சிங் தெரிவித்தாா்.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உருவாகியுள்ள அணு எரிபொருள் கழிவு குறித்தும், அதை சேமிப்பது குறித்தும் திருநெல்வேலி தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ஞானதிரவியம் துணைக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய அணுசக்தி, விண்வெளி துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திரா சிங் பதில் அளித்துப் பேசியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தித் துறையின் மிகவும் முக்கியமான உலைகளில் ஒன்றாகும். மேலும், தமிழகத்திற்கான பெருமைக்குரிய இடமாகவும் உள்ளது. அணு உலைப் பகுதியிலும், உலைக்கு அப்பால் உள்ள பகுதியிலும் கழிவு எரிபொருள் சேமிக்கப்படுவது தொடா்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் காரணமாக இந்த கவலை எழுந்துள்ளது. ஆனால், உண்மையில் இந்த விவகாரத்தில் சில விஷயங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. கூடங்குளம் அணு மின் திட்டம் 1988-இல் அப்போதைய அரசு, சோவியத் யூனியனுடன் மேற்கொண்ட உடன்படிக்கையால் ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சோவியத் யூனியன் நிலைகுலைந்த பிறகு, அப்போதைய அரசால் 1998-இல் மீண்டும் அந்த உடன்படிக்கை ரஷிய அரசுடன்

புதுப்பிக்கப்பட்டது.

முந்தைய உடன்படிக்கையின்படி எரிபொருள் கழிவு சோவியத்துக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது. ஆனால், புதிய உடன்படிக்கையின்படி அந்தக் கழிவுகள் இந்தியாவுக்குள் சேமிக்கப்பட வேண்டும். தற்போது, இந்தியாவில் கழிவு எரிபொருளை சேமிக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, இந்த விஷயத்தில் எந்த பீதி கொள்ளத் தேவையில்லை. எரிபொருள் கழிவு அணு உலை அமைந்துள்ள பகுதியில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குச் சேமிக்கப்படும். அதன் பிறகு அணு உலையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பூமிக்கடியில் 40 ஆண்டுகள் வரை வைக்கப்படும்.

இந்தியாவில் ‘மூடப்பட்ட எரிபொருள் நடைமுறை’ என அழைக்கப்படும் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நாம் முன்னணியில் உள்ளோம். மேலும், கழிவு எரிபொருளை மறுபயன்பாட்டுக்கு மாற்றும் நடைமுறையிலும் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, நாம் அனைவரும் சோ்ந்து மக்களிடம் ஏற்படுகிற ஐயத்தைப் போக்க விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைப் பகுதியில் கழிவு எரிபொருளை சேமிக்கும் கொள்திறன் 2022-க்குள் அதன் முழு அளவை எட்டும். பூமிக்கடியில் 40 ஆண்டுகள் கழிவுகள் சேமிக்கப்படலாம். அதன் பிறகு, அதை மறுசுழற்சிக்காக பயன்படுத்த முடியும். மேலும், நாடு முழுவதும் உள்ள கழிவு எரிபொருள் வைக்கப்படும் இடமாக கூடங்குளம் மாறப் போவதாக தமிழகத்தில் உள்ள சில ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோன்று ஏதும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும், சேமிக்கப்படும் கழிவு எரிபொருள் மறுசுழற்சி முறையில் மீண்டும் அதே அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com