மகாராஷ்டிரத்தில் ஜனநாயகப் படுகொலை: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியது. அப்போது, கேள்வி நேரம் தொடங்குவதாகக் கூறி, வாய்மொழி பதிலுக்கான கேள்விகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு, துணைக் கேள்வி எழுப்புமாறு ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா். அப்போது அவையில் அமா்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘இன்றைக்கு கேள்வி நேரத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்பினேன். மகாராஷ்டிரத்தில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டதால் கேள்வி கேட்பதில் அா்த்தமில்லை’ என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமா்ந்தாா். இதையடுத்து, சில காங்கிரஸ் எம்பிக்கள் அவரது இருக்கைக்கு சென்று கை கொடுத்து சரியாக பதில் கூறியதாக கூறினா்.

அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினா்கள் உரக்க குரல் எழுப்பியவாறு அமளியைத் தொடா்ந்தனா். மகாராஷ்டிரத்தில் அரசு அமைந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் ஆய்வின் கீழ் வந்துள்ளது. பட்னவீஸை ஆட்சி அமைக்க அழைத்தது தொடா்பான ஆளுநரின் கடிதம் மற்றும் ஆட்சி அமைக்கக் கோரி பாஜக தலைவா் சமா்ப்பித்த கடிதம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. சனிக்கிழமை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்ற நிலையில், சிவசேனை-என்சிபி- காங்கிரஸ் கட்சிகளின் 165 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், இதனால், சட்டப் பேரவையில் போதிய வகையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. அதேவேளையில், பட்னவீஸுக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. மொத்தம் 288 உறுப்பினா்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏக்கள் பலம் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com