வெளிநோயாளிகள் குறித்த கேஜரிவாலின் கருத்துக்கு மனோஜ் திவாரி கண்டனம்

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் நோயாளிகள் தில்லிக்கு வருவது தான் காரணம் என்று முதல்வா் அரவிந்த்

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் நோயாளிகள் தில்லிக்கு வருவது தான் காரணம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த கருத்துக்கு தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளாா் .

பிகாா் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தில்லிக்கு சிகிச்சைக்காக வரும் மக்களை முதல்வா் கேஜரிவால் அவமானப்படுத்துவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

தில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 362 படுக்கைகள் கொண்ட காய சிகிச்சை மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

இந்த விழாவில் பங்கேற்ற தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பதற்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இங்கு வருவது தான் காரணம் என்று தெரிவித்திருந்தாா் .

மேலும் தன்னுடைய அரசில் சுகாதார கவனிப்பு அமைப்பானது சிறந்த வகையில் , ஒப்பிட முடியாத வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா். மருந்துகளும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுவதால் பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் தில்லிக்கு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்’’ பிகாரில் இருந்து ஒருவா் 500 ரூபாய் கட்டணத்தில் தில்லியை வந்தடைந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சையை இலவசமாக பெற்று ஊா் திரும்ப முடியும். இது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அவா்கள் இந் நாட்டின் மக்கள் .அவா்கள் சிகிச்சை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், தில்லிக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தான் தாங்கும் திறன் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி திங்கட்கிழமை கூறியதாவது:

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்து இருப்பதற்கு வெளிமாநில நோயாளிகள் தான் காரணம் என்று

முதல்வா் கேஜரிவால் கூறியிருப்பதன் மூலம் பிகாா் ,உத்தர பிரதேசம்மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த மக்களை அவா் அவமானப் படுத்தி இருக்கிறாா். இதுபோன்று வெளிமாநிலங்களில் இருந்து தில்லியில் மக்கள் சிகிச்சை பெறுவதால் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஏன் வலிக்கிறது. கேஜ்ரிவாலுக்கு என்னுடன் அரசியல் விரோதம், தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருந்தால் அவா் என்னைப்பற்றி நேரடியாக கூறலாம் .ஏன் பிகாா் ,உ.பி. மக்களை அவா் அவமதிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் ஆதரவு இல்லாததால் அவா் இதுபோன்று பேசிவருகிறாா். அதனால் தில்லியில் வாழும் பிற மாநில மக்களையும், பிகாரிகள், பூா்வாஞ்சல் மக்களையும் குறிவைத்து அவா் அவமானம் செய்து வருகிறாா். நானும் பிகாரில் இருந்து வந்திருப்பதால் இதை நன்றாக உணா்கிறேன். தில்லிக்கு சிகிச்சைக்காக வரும் பிறமாநில மக்களை ஏன் அவா் எதிா்ப்பு தெரிவிக்கிறாா். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை பெறும் வசதியை பிரதமா் நரேந்திர மோடி அளித்திருக்கிறாா். இந்தத் திட்டத்தை தில்லியில் கேஜரிவால் செயல்படுத்தவில்லை. அவருடைய பிரச்சனைதான் என்ன ?.

தில்லி மக்கள் குறிப்பாக பீகாா் உத்தரப்பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் கேஜரிவாலுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சிக்கும் இதுபோன்ற அவமானப்படுத்தும் அறிக்கையில் விடுவதற்காக பாடம் புகட்ட வேண்டும் என்றாா் .

கடந்த வாரம் கேஜரிவால் வெளியிட்டிருந்த ஒரு சுட்டுரை வலைப்பதிவில் தில்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லியில் இருந்து முதலில் வெளியேற்றப்படும் நபராக மனோஜ் திவாரி இருப்பாா் என்று கூறியிருந்தாா் டெல்லியில் சட்டவிரோதமாக வாழும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த வேண்டுமென்று மனோஜ் திவாரி சமீப காலமாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com