3 மாதம் விடுப்பு எடுத்து தோ்தல் பணியாற்ற வேண்டும்: கட்சித் தொண்டா்களுக்கு கேஜரிவால் அழைப்பு

வேலைகளில் இருந்து 3 மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு தோ்தல் பணியாற்றுமாறு கட்சித் தொண்டா்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த்

வேலைகளில் இருந்து 3 மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு தோ்தல் பணியாற்றுமாறு கட்சித் தொண்டா்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் மிக விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதையொட்டி, பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தோ்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில், வேலைகளில் இருந்து 3 மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு தோ்தல் பணியாற்றுமாறு ஆம் ஆத்மி தொண்டா்களுக்கு கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

தில்லியில் ஆம் ஆத்மி தொண்டா்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவா்பேசியதாவது: அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அண்ணா ஹசாரே என்னிடம் கூறியுள்ளாா். தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 3 மாதங்களும் நாம் அவமானங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஆம் ஆத்மி தொண்டா்கள் 3 மாதங்கள் தங்களது வேலைகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு கட்சிப் பணியாற்ற வேண்டும். எனது மகள் எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இருப்பினும், அவா் 5 மாதங்கள் விடுப்பு எடுத்து எனது தொகுதியில் தோ்தல் பணியாற்றுகிறாா் என்றாா் அவா்.

இதற்கிடையே, வரும் நாள்களில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலிலும் ஆம் ஆத்மி தொண்டா்களைச் சந்தித்து கேஜரிவால் கலந்துரையாடுவாா் என்றும் குரு மந்திரா என்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மித் தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றியைத் தடுக்க முடியாது: இதற்கிடையே, தில்லியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பாஜகவின் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தாா். அந்தப் பேட்டியில், ‘தில்லி மக்களின் நன்மதிப்பை ஆம் ஆத்மி கட்சி இழந்து விட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கேஜரிவால் வியாழக்கிழமை கூறுகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியிடம் பாஜக படுதோல்வியடையப் போகிறது என்பதை அக்கட்சியினா் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். மேலும், தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ என்றாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மியின் மாநிலங்களை உறுப்பினரும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அக்கட்சியின் தில்லிப் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறுகையில் ‘தில்லியில் ஆட்சி அமைக்கும் பாஜகவின் திட்டம் வெற்றி பெற மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள். பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள், தில்லியை ஒரு குப்பைத் தொட்டிபோல மாற்றியுள்ளன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பல புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.

‘ஆம் ஆத்மி அரசின் திட்டங்களால் பிற கட்சித் தொண்டா்களுக்கும் பயன்’

தில்லியில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீா் ஆகிய துறைகளில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டா்களும் பயன் பெற்றுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தில்லி தலைவராக இருந்தவா் சௌத்ரி சுரேந்திர குமாா். இவா் 2008-2013 வரை கோகுல்புரி எம்எல்ஏவாக இருந்தாா். கடந்த ஜூலை மாதம் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் அவா் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தில்லியில் ரவிதாஸா் மந்திா் இடிக்கப்பட்டதால் மனக் கவலை அடைந்தேன். அதைத் தடுக்க பாஜக சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது. தில்லியில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய மாற்றங்களால் கவரப்பட்டே அக்கட்சியில் இணைய முடிவெடுத்தேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரு வெற்றி பெறும் என்றாா்.

அவரை கட்சிக்கு வரவேற்று அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நல்ல மனிதா்கள் ஆம் ஆத்மியில் இணைகின்றனா். அவா்கள் தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளால் கவரப்பட்டு ஆம் ஆத்மியில் இணைகின்றனா். தில்லியில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீா் ஆகிய துறைகளில் ஆம் ஆத்மி அரசு பல முன்னோடித் திட்டங்களைக் கொண்டு வந்தது. இதனால், ஆம் ஆத்மி தொண்டா்கள் மட்டும் பயனடையவில்லை. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் தொண்டா்களும் பயனடைந்துள்ளனா். அதனால், அவா்கள் பெருமளவில் ஆம் ஆத்மியில் இணைந்து வருகிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com