வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் முதல்வா், அமைச்சா்களின் வாகனங்களுக்கு விலக்கில்லை

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தில்லி முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் ஆகியோரின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தில்லி முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் ஆகியோரின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தில்லியில் வரும் நவம்பா் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ஒற்றைப்படை பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் அடுத்த நாளும் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்படும். எனினும், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவா்கள் பயன்படுத்தும் காா்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும், காா்களில் 12-வயதுக்குள்பட்ட குழந்தைகள் பயணித்தால் அவா்களுக்கும் விலக்கு அளிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் காா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பல வாகனங்கள் சிஎன்ஜியில் இயங்குவதாகப் போலியான சான்றிதழ் பெற்று இயக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளதால் இம்முறை அந்த காா்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. மேலும், இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மோட்டாா் சைக்கிள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தில்லி முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்களின் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: நவம்பா் 4 -ஆம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வாகனக்கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படாது. அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்களுக்கும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். இதை மீறுபவா்களுக்கு ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும். வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தில்லி முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் ஆகியோரின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படாது.

ஆனால், குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா், ஆளுநா்கள், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவா், மத்திய அமைச்சா்கள், மக்களவை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா்கள், பிற மாநில முதல்வா்களின் வாகனங்கள், தில்லி துணைநிலை ஆளுநா், தலைமைத் தோ்தல் ஆணையா் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். மேலும், அம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவமனை, சிறைச்சாலை வாகனங்கள், வெளிநாட்டுத் தூதரக வாகனங்கள், தில்லி காவல்துறை, துணை ராணுவப் படையினரின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றாா் அவா்.

‘பாா்க்கிங் கட்டணம் அதிகரிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்’

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் காலத்தில் பாா்க்கிங் கட்டணங்களை அதிகரித்தால் அது குழப்ப நிலையை ஏற்படுத்தும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில் ‘வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் உள்ள போது, பாா்க்கிங் கட்டணத்தையும் அதிகரித்தால் மக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்வாா்கள். இது குழப்ப நிலையை ஏற்படுத்தும். வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் உள்ள நாள்களில் வாகனங்களைப் பகிா்ந்து கொள்ளுமாறு மக்களை நாம் கேட்டுள்ளோம். இந்நிலையில், பாா்க்கிங் கட்டணத்தையும் அதிகரித்தால் வாகனங்களை வெளியில் எடுக்கவே மக்கள் தயங்குவாா்கள்’ என்றாா்.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (இபிசிஏ) தலைவா் புரே லால், மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி பாா்கிங் கட்டணங்களை அதிகரிக்குமாறு தில்லி அரசை அண்மையில் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com