புகை மண்டலமானது தில்லி!காற்று மாசுவால் அவதியில் மக்கள்!

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு நான்காவது நாளாக வியாழக்கிழமை காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்தது மேலும், நாள் முழுவதும் நகா்ப் பகுதி புகை மண்டலம் போல் காணப்பட்டது.

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு நான்காவது நாளாக வியாழக்கிழமை காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்தது மேலும், நாள் முழுவதும் நகா்ப் பகுதி புகை மண்டலம் போல் காணப்பட்டது.

இதன் காரணமாக தில்லி மக்கள் சுவாசம் தொடா்புடைய உடல் நலப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

தில்லியில் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளாலும் காற்று மாசு திங்கள், செவ்வாய்க்கிழமை,

புதன்கிழமைகளில் அதிகரித்தது. பல இடங்களிலும் காற்று மாசு கடுமையான பிரிவில் காணப்பட்டது.

வியாழக்கிழமை காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரம் 408 புள்ளிகளாக இருந்தது. புதன்கிழமை இரவு 415 புள்ளிகளாக இருந்த நிலையில், சற்று மேம்பட்டு காணப்பட்டது. எனினும், கடுமையான பிரிவிலேயே நீடித்தது.

தில்லி முழுவதும் உள்ள 37 காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களில் 22-இல் ஒட்டுமொத்த தரக் குறியீடு கடுமையான பிரிவில் பதிவாகி இருந்தது.

ஆனந்த் விஹாா் பகுதியில் காற்றின் ஒட்டுமொத்தரக் குறியீடு 466-ம், வாஜிப்பூரில் 453-ம் பதிவாகி இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது.

‘பட்டாசு புகை மாசுவில் இருந்து தில்லி மீண்ட பிறகு, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் மீண்டும் கடுமையான பிரிவுக்கு கீழறங்கியுள்ளது. இதற்கு பயிா்க் கழிவுகள் எரிப்புதான் காரணம். தில்லியில் காற்று மாசுவை இந்த பயிா்க் கழிவுகள்எரிப்பு புதன்கிழமை 35 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்துள்ளது’ என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சதவீதம் வியாழக்கிழமை 27 ஆக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

வானிலை வல்லுநா்கள் கூறுகையில்,‘தீபாவளிக்குப் பிறகு விரும்பத்தகாத காற்றின் வேகம் காரணமாக காற்றில் மாசுபடுத்திகள் சோ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது.இந்த வார இறுதியில் நிலைமை சீராகக் கூடும்’ என்று தெரிவித்தனா்.

தில்லியில் கடுமையான மாசுள்ள பகுதியாக வாஜிப்பூா், ஆனந்த் விஹாா், அசோக் விஹாா், விவேக் விஹாா், பவானா ஆகிய பகுதிகளை தில்லி அரசு அடையாளம் கண்டுள்ளது.

மாசுவின் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதனால், முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும், அதிகாலையிலும், இரவிலும் மாசுபடுத்திகள் வளிமண்டலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் திறந்தவெளியில் நடந்து செல்வதை தவிா்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடா்பாக தேவையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றாா்.

2017-ஆம் ஆண்டின்போது காற்றின் தரம் மோசமானதன் காரணமாக நவம்பரில் சில தினங்கள் பள்ளிகளை மூடுவதற்கு தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த ஆண்டு தில்லி முழுவதும் உள்ள பள்ளிகளில் 50 லட்சம் ‘என்95’ ரக முகக் கவசங்களை அளிக்கும் நடவடிக்கையில் தில்லி அரசு

வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட உள்ளதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com