பாலிவுட் நடிகை இஷா ஷர்வானியிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி: தில்லி இளைஞர்கள் மூவர் கைது

வெளிநாடுவாழ் இந்தியரான (என்ஆர்ஐ) பாலிவுட் நடிகை இஷா ஷர்வானியிடம் தொலைபேசியில் ஆஸ்திரேலிய

வெளிநாடுவாழ் இந்தியரான (என்ஆர்ஐ) பாலிவுட் நடிகை இஷா ஷர்வானியிடம் தொலைபேசியில் ஆஸ்திரேலிய வருமான வரி அலுவலக அதிகாரி போல் பேசி ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆஸ்திரேலிய டாலர்களை பெற்று மோசடி செய்ததாக தில்லியைச் சேர்ந்த மூன்று பேரை இணையதள குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 7-8 மாதங்களில் இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக தில்லி போலீஸார் கூறினர். இதுதொடர்பாக தில்லி காவல்துறையின் இணையதள குற்றப்பிரிவு துணை ஆணையர் அன்யேஷ் ராய் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
தில்லி இணையதள குற்றப் பிரிவுக்கு சம்பவத்தன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் இந்தியரான பிரபல பெண் நடிகை இஷா ஷர்வானி புகார் அளித்திருந்தார். அதில், "எனக்கு சம்பவத்தன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஆஸ்திரேலிய வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறினார். அந்த தொலைபேசி எண் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பரா நகரில் இருந்து வந்திருப்பதாக எனது செல்லிடப்பேசி திரையில் தெரிந்தது. மேலும், செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட நபர், எனது வருமான வரிக் கணக்கு விவரங்களைக் கூறி, அதில் தவறுகள் இருப்பதாகவும், இதனால் எனக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதைச் சரிசெய்ய வேண்டுமெனில் இந்தியக் கிளையின் ஆஸ்திரேலிய வரி அலுவலகத்தின் அதிகாரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆஸ்திரேலிய டாலர்களை வெஸ்டர்ன் யூனியன் மற்றும் ஆர்ஏஐ மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் வழியாக அனுப்ப வேண்டும் எனக் கூறினார். பலமுறை தொலைபேசியில் மிரட்டியதால் அந்தப் பணத்தை அவர்கள் கூறியது போல பணப் பரிவர்த்தனை செய்தேன். அதன் பின்னர் விசாரித்த போது, ஆஸ்திரேலியா வரி அலுவலகத்தில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்பதும், ஆள்மாறாட்டம் செய்து பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வெஸ்டர்ன் யூனியன் மற்றும் ஆர்ஏஐ மணி டிரான்ஸ்பர் நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெறப்பட்டன. அதன் பிறகு, வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரான பானுஜ் பெரி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் சிலருடன் சேர்ந்து இந்த பண மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தில்லி உத்தம் நகரைச் சேர்ந்த பானுஜ் பெரி (24), ரமேஷ் நகரைச் சேர்ந்த புனீத் சதா (34), விகாஷ்புரியைச் சேர்ந்த ரிஷப் கன்னா (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
அவர்கள் மூவரும் ஆஸ்திரேலியா வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கக்கூடிய மக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களின் ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் கணக்காளர்களிடமிருந்து வருமான வரிக் கணக்குகளின் தகவல்களைப் பெற்று, மென்பொருள்களின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் காவல் உயர் அதிகாரி அன்யேஷ் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com