காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படையினருக்கு குளிர்தாங்கும் குடில்கள் அமைக்க அனுமதி

குளிர்காலம் நெருங்குவதையொட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் படையினருக்காக 40 குளிர்தாங்கும்

குளிர்காலம் நெருங்குவதையொட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் படையினருக்காக 40 குளிர்தாங்கும் குடில்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சிஆர்பிஎஃப் படையினர் தங்குவதற்காக அங்குள்ள தனியார் விடுதிகள், வீடுகள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. 
அதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிஆர்பிஎஃப் படையினர் ஏராளமானோர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக வரும் அக்டோபர் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரவிருப்பதால், பாதுகாப்புப் படையினர் பள்ளத்தாக்கிலேயே முகாமிட்டுள்ளனர். 
அவர்களுக்காக, பள்ளத்தாக்கில் 40 குளிர் தாங்கும் குடில்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் குடில்களின் உட்புறம் குளிர் தாக்காத வகையில் பாலியுரித்தீன் ஃபோம் எனப்படும் செயற்கை பஞ்சு மூலம் வேயப்பட்டிருக்கும்.
இதுதவிர, பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் படையினருக்காக 2 லட்சம் தென்னை நார் மெத்தைகள் வாங்குவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, துணை ராணுவப் படையினருக்கு பாய்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
மேலும், கடந்த 2003-ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்ற சிஆர்பிஎஃப் படையினர், அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த பண்டிட் சமூகத்தினரின் வீடுகள், உணவு விடுதிகளில் தங்கி வந்தனர். ஆனால், அவை அப்போது இந்திய அரசுக்குச் சொந்தமானவை இல்லை என்பதால், அங்கு சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியவில்லை. 
தற்போது, அந்த விடுதிகள் மற்றும் வீடுகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தகவல்களை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com