டெங்கு ஒழிப்பு: தில்லிவாசிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

தில்லிவாசிகள் ஒவ்வொருவரும் தங்களின் பத்து நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் டெங்கு ஒழிப்பு

தில்லிவாசிகள் ஒவ்வொருவரும் தங்களின் பத்து நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் டெங்கு ஒழிப்பு பிரசாரம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"10 வாரம்; 10 மணி; 10 நொடி' என்ற டெங்கு ஒழிப்பு பிரசாரத்தை தில்லி அரசு தொடக்கி உள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தில்லிவாசிகள் தங்கள் வீட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் டெங்கு கொசு பெருக்கம் ஏற்படாமல் சுத்தப்படுவதுதான் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், டுவிட்டரில் முதல்வர் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்துள்ள விடியோவில், "தில்லிவாசிகள் ஒவ்வொருவரும் தங்களின் பத்து நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் வீட்டில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.  
நானும் எனது நண்பர்கள், உறவினர்கள் பத்து பேருக்கு தொலைபேசியில் அழைத்து டெங்கு ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொள்ள கேட்டுக் கொண்டேன். இந்த தகவலை வாட்ஸ் ஆப்பிலும் தெரிவிக்க வேண்டும். எனது வீட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை நான் மேற்கொண்டேன். நீங்கள் இதை செய்து டெங்கு ஒழிப்பில் சாம்பியனாக வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல், தில்லி அமைச்சர்கள் கோபால் ராய், ராஜேந்தர் பால் கௌதம் ஆகியோர் தங்கள் வீட்டில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்யும் புகைப்படங்களை சுட்டுரையில் பகிர்ந்தனர்.
மேலும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் டெங்கு ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ள வலியுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தில்லியில் 122 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 52 பேரும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 39 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com