பெண்அதிகாரி காரில் சுட்டுக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கிழக்கு தில்லியில் காரில் சென்ற காப்பீட்டு நிறுவனத்தின் பெண் அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம 

கிழக்கு தில்லியில் காரில் சென்ற காப்பீட்டு நிறுவனத்தின் பெண் அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: கிழக்கு தில்லி, பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் உஷா குப்தா (59). இவர் தில்லியில் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை தனது கணவர் கைலாஷ் சந்த் குப்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைஷாலியில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் பட்பர்கஞ்சில் உள்ள சனி மந்திரில் அவரது கணவர் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். காரில் ஓட்டுநர் இருக்கையில் உஷா குப்தா அமர்ந்திருந்தார். அந்த வேளையில், இரு மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து காரின் அருகில் வாகனத்தை நிறுத்தினர். அவர்களில் ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து உஷா குப்தாவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரது நெற்றிப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவர் சரிந்து விழுந்தார்.
இதனிடையே, சாமி கும்பிடச் சென்றுவிட்டு காருக்கு வந்த கைலாஷ் சந்த் குப்தா, தனது மனைவி ரத்தக் காயத்துடன் கிடப்பதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, உஷா குப்தா சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 
இதனிடையே, போலீஸார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். எனினும், கேமரா தரமானதாக இல்லாததால் மோட்டார்சைக்கிளில் வந்த நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. உஷா குப்தாவை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் கூலிப் படையைச் சேர்ந்தவர்களா, முன்விரோதம் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com