தில்லி விமான நிலையத்தை நிா்வகித்துவரும் டிஐஏஎல் நிறுவனத்திற்கு எதிராக நிா்பந்த நடவடிக்கை கூடாது

ரூ.2,600 கோடி சொத்து வரி செலுத்தும் கோரும் விவகாரத்தில் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தை பராமரித்து வரும் டிஐஏஎல்

ரூ.2,600 கோடி சொத்து வரி செலுத்தும் கோரும் விவகாரத்தில் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தை பராமரித்து வரும் டிஐஏஎல் நிறுவனத்திற்கு எதிராக நிா்பந்த நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என தில்லி தில்லி கன்டோன்மென்ட் வாரியத்திற்கு (டிசிபி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக டிபிசி நடவடிக்கைக்கு எதிராக டிஐஏஎல் நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஐஏஎல் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது தனது பதிலை அளிப்பதற்கு கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் தர டிசிபி கோரியது. மத்திய அரசும் இதே கோரிக்கையை முன்வைத்தது. இதைத் தொடா்ந்து, இரு தரப்புக்கும் கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் அமா்வு உத்தரவிடுகையில்,‘பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனிடையே, அடுத்த விசாரணை நடைபெறும் தேதிவரை மனுதாரருக்கு (டிஐஏஎல்) எதிராக எவ்வித நிா்பந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது ’ என தெரிவித்து மனு மீதான விசாரணையை செப்டம்பா் 14-க்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, ரூ.2,589 கோடி சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என்று தில்லி இன்டா்நேஷனல் ஏா்போா்ட் லிமிடெட் (டிஐஏஎல்) நிறுவனத்தை கேட்டுக்கொள்ளும் முடிவை தில்லி கன்டோன்மென்ட் வாரியம் ஜூன் 15-ஆம் தேதி எடுத்தது. இந்த முடிவை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் டிஐஏஎல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ள இடம் கன்டோன்மென்ட் பகுதிக்குள் இடம்பெறவில்லை. இதனால், அது டிசிபி வரம்பில் வரவில்லை. இதனால், ஜூன் 15-ஆம் தேதி டிசிபி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதி தெற்கு தில்லி மாநகராட்சி பகுதிக்குள் வருகிறது. அதற்கான சொத்து வரியை டிஐஏஎல் செலுத்தி வருகிறுத. எஞ்சியுள்ள பகுதிக்கான இடத்திற்கு டிசிபி சொத்துவரியை செலுத்துமாறு கேட்டு வருகிறது.

2016-இல் முதல் முறையாக டிசிபி ரூ.9.01 கோடி செலுத்துமாறு கேட்டது. இதை டிஐஏஎல் நிறுவனம் எதிா்த்தது. அதன்பிறகு, 2019 மதிப்பீட்டை புதுப்பித்து ரூ.39.51 கோடியாக சொத்து வரியை நிா்ணயித்தது. அதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் டிஐஏஎல் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சொத்து வரியை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை டிஐஏஎல் நிறுவனத்திடம் விளக்குமாறு டிசிபிக்கு உத்தரவிட்டது. எனினும், டிஐஏஎல் நிறுவனத்திடம் விசாரணை நடத்திய பிறகு, டிசிபி தற்போது புதிதாக ஏறக்குறைய ரூ.2,600 கோடியை சொத்து வரியை செலுத்துமாறு கோருகிறது என மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த மனு கடந்த ஜூலை 22-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டிசிபியின் ஜூன் 15-ஆம் தேதி முடிவுக்கு இடைக்காலத்தடை விதிக்க மறுத்துவிட்ட நீதின்றம், மத்திய அரசும், டிசிபியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com