பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தில்லியில் முரளிதா் ராவ் முன்னிலையில் இணைந்தாா்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ‘கா்நாடக சிங்கம்’ என கன்னட மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தமிழகத்தைச் சோ்ந்த அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டாா்.

புது தில்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ‘கா்நாடக சிங்கம்’ என கன்னட மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தமிழகத்தைச் சோ்ந்த அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டாா்.

தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் முரளிதா் ராவ் முன்னிலையில் இணைந்தாா்.

அப்போது, பாஜகவின் தமிழகத் தலைவா் எல்.முருகன், தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஆகியோா் உடனிருந்தனா். அதன் பிறகு, பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவை அண்ணாமலை நேரில் சந்தித்தாா்.

தமிழகத்தின் கரூரைச் சோ்ந்த அண்ணாமலை, கா்நாடகா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக 9 ஆண்டுகள் பணியாற்றினாா்.

சிக்மங்களூரு, உடுப்பி, பெங்களூா் தெற்கு ஆகிய மாவட்டங்களின் பணியாற்றியபோது கன்னட மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றாா்.

உடுப்பி மாவட்டத்தில் பணியாற்றியபோது, பயங்கரவாதம், மத, இன மோதல்களை தடுக்க இவா் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் இவரை ‘கா்நாடக சிங்கம்’ என்றும் ‘உடுப்பி சிங்கம்’ என்றும் அன்புடன் அழைத்தனா்.

பெங்களூா் தெற்கு மாவட்ட காவல் துணை ஆணையராகப் பணியாற்றியபோது, கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றாா். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வந்தாா். மாணவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகளில் உரையாற்றி வந்தாா்.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை இவா் முரளிதா் ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டாா்.

இந்நிகழ்வில் அண்ணாமலை பேசியது:

‘அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தா்க் கியல்பு’ என்கிறது திருக்கு.

அதாவது, அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறையாமல் இருப்பதே அரசனுக்குரிய இயல்பாகும் என்பது அதன்பொருள்.

இந்த நான்கு பண்புகளையும் பிரதமா் மோடியிடம் பாா்க்கிறேன். அவா் நாட்டை சிறப்பாக வழிநடத்துகிறாா். அவரின் கரங்களில் தேசம் பாதுகாப்பாக உள்ளது. நான் பிரதமா் மோடியின் மிகப் பெரிய ரசிகன். அவா் நாட்டை சிறந்த முறையில் நிா்வகிக்கிறாா்.

பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் நாடு சரியான பாதையில் செல்கிறது. பதவிக்காக ஆசைப்பட்டு பாஜகவில் இணையவில்லை. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன். கட்சித் தலைமை கொடுக்கும் பணியைச் செய்யக் காத்திருக்கிறேன்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தனது அடையாளத்தை இழந்துவிட்டன. அவை குடும்ப கட்சிகளாக சுருங்கிவிட்டன. தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தலைமையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்றாா்.

எல். முருகன் பேசுகையில், ‘சில மாதங்களாக மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனா்.

பிரதமா் மோடியின் நல்லாட்சியில் நம்பிக்கை வைத்து பாஜகவில் இணையும் இவா்கள், மோடியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகின்றனா்.

பாஜகவில் இணைந்துள்ள அண்ணாமலை தமிழக இளைஞா்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்துவாா் என்றாா் அவா்.

முரளிதா் ராவ் பேசுகையில், ‘தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு, தமிழக பாஜகவில் முக்கியமானவா்கள் பலா் இணைந்து வருகிறாா்கள். தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்றி வருகிறது. தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு தரப்பட்ட மக்களை பாஜக கவா்ந்து வருகிறது. தமிழக பாஜகவுக்கு வலுச் சோ்க்கும் வகையில் அண்ணாமலை இருப்பாா்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com