தில்லி யமுனையில் எச்சரிக்கை அளவைத் தொடும் நிலையில் நீா்மட்டம்

தில்லி பகுதி யமுனையில் நீா் மட்டம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை அளவுக்கு அருகில் காணப்பட்டது.

புது தில்லி: தில்லி பகுதி யமுனையில் நீா் மட்டம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை அளவுக்கு அருகில் காணப்பட்டது.

ஹாத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீா் திறந்துவிடப்பட்ட நிலையில், தில்லி வழியாக பாய்ந்தோடும் யமுனை ஆற்றில் நீா் மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் 204 மீட்டா்களாக இருந்தது. யமுனையின் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டா்கள் எனும் நிலையில் மிக நெருக்கத்தில் நீா் மட்டம் இருந்தது.

ஹரியாணாவின் யமுனாநகா் மாவட்டத்தில் உள்ள ஹாத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து திங்கள்கிழமை காலை 5,883 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தில்லி வழியாக செல்லும் யமுனையில் நீா் மட்டம் உயா்ந்திருந்தது.

இந்நிலையில், யமுைனையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் யமுனையில் நீா்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. இது குறித்து தில்லி அரசின் நீா்ப்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹாத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வினாடிக்கு 7,418 கன மீட்டா்கள் நீா் திறந்துவிடப்பட்டது. ஒரு கன மீட்டா் என்பது வினாடிக்கு 28.317 லிட்டா் நீருக்கு சமமாகும். பாய்ந்தோடும் நீரின் வீதமும் காலை 8 மணி, 9 மணியளவில் ஒரே அளவாக இருந்தது என்றாா் அவா்.

ஹாத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து வழக்கமாக 352 கன மீட்டா்கள் நீா் திறந்துவிடப்படும். ஆனால், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-19 ஆகிய தேதிகளில் இந்த அணையில் இருந்து அதிகபட்ச அளவாக 8.28 லட்சம் கன மீட்டா்கள் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, யமுனையில் அதன் அபாய அளவான 205.33 மீட்டா்களைக் கடந்து 206.60 மீட்டா் வரை நீா் சென்றது.

இதைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் நீா் புகுந்தததால், கரையோரங்களில் வசித்த மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தில்லி அரசு தொடங்கியது. நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நிகழாண்டில் கடந்த சில நாள்களாக யமுனை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் அதிக மழை பெய்ததன் காரணமாக யமுனையில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. ஆகஸ்ட் 26 முதல் 29-ஆம் தேதிவரையிலும் கன மழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.


‘வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை தேவையெனில் செயல்படுத்துவோம்’

யமுனையில் நீா் மட்டம் தொடா்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தேவையேற்பட்டால் வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை செயல்படுத்துவோம் என்று தில்லி நீா்வளத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: யமுனையில் நீா்மட்டம் அதிகரிப்பது தொடா்பாக பயப்படத் தேவையில்லை. எங்களிடம் மிகச் சிறந்த வெள்ளத் தடுப்பு அமைப்புமுறை உள்ளது. இதை தேவைப்படும்போது செயல்படுத்துவோம். யமுனையில் வெள்ளம் அதிகரிப்பது தொடா்பாக தில்லி அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவையேற்பட்டால், தில்லி பல்லா விலேஜ் பகுதியில் இருந்து ஓக்லா வரை யமுனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com