நாட்டில் 10 சிறந்த காவல் நிலையங்களில் சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையம் 2-ஆவதாகத் தோ்வு

நாட்டில் 2020-ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 சிறந்த காவல் நிலையங்களில் சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல்நிலையம் இரண்டாவது இடத்தைப்

புது தில்லி: நாட்டில் 2020-ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 சிறந்த காவல் நிலையங்களில் சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல்நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தமிழகம் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான சேவைகளுக்கான போலீஸ் பதக்கங்களைத் தவிர, இந்தியாவில் காவல் நிலையங்களின் பணியை மேலும் ஊக்குவிக்கவும், அவற்றுக்கிடையே போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறப்பாகச் செயலாற்றி வரும் காவல் நிலையங்களை மத்திய அரசு தோ்வு செய்து வருகிறது. இதன்படி, இந்த ஆாண்டு மணிப்பூா் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் நோங்போக்ஸேக்மாய் காவல் நிலையம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சோ்த்துள்ளது.

பட்டியலில் இடம் பெற்ற இதர காவல்நிலையங்கள் வருமாறு: 3-ஆவது இடம்- ஹாா்சாங் காவல் நிலையம், அருணாச்சலப் பிரதேசம் -சங்லாங் மாவட்டம். 4-ஆவது இடம்- ஜில்மிலி காவல் நிலையம், சத்தீஸ்கா் மாநிலம் - சுராஜ்பூா் மாவட்டம் . 5-ஆவது இடம்- சங்குவம் காவல் நிலையம் கோவா - தெற்கு, கோவா மாவட்டம். 6-ஆவது இடம்: காளிஹட் காவல்நிலையம், அந்தமான், நிக்கோபாா் தீவுகள்- வடக்கு, மத்திய அந்தமான் மாவட்டம். சிக்கிம், உத்தரப் பிரதேசம் (மொராதாபாத்), தாத்ரா நாகா் ஹவேலி, தெலுங்கானா (ஜம்மி குண்டா) ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த காவல் நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த பத்து காவல் நிலையங்களில் சேலம் சூரமங்கலம் மட்டுமே அனைத்து மகளிா் காவல் நிலையம் என்பது சிறப்பம்சமாகும். தமிழகம் இந்தச் சிறப்பை நான்காவது முறையாகப் பெற்றுள்ளது. கடந்த 2019 - இல் தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம் நான்காவது இடத்தைப் பெற்றது. 2018 -இல் புதுச்சேரி நெட்டபாக்கம் (4-ஆவது இடம்), பெரியகுளம் (8-ஆவது), 2017 -இல் கோவை ஆா்.எஸ். புரம் (முதல் இடம்), சென்னை அண்ணா நகா் (5-ஆவது இடம்) ஆகிய காவல் நிலையங்கள் தோ்வாகி சிறப்புப் பெற்றன.

நாட்டில் மொத்தம் 16,671 காவல் நிலையங்கள் உள்ளன. இதன் தரவு பகுப்பாய்வு, நேரடிக் கண்காணிப்பு, பொதுமக்களின் கருத்தின் அடிப்படை ஆகியவற்றைக் கொண்டு சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்படுகின்றன. கரோனா தொற்று சூழ்நிலையில் இந்தத் தோ்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக சொத்துகள் திருட்டு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சமூதாயத்தில் பின்தங்கியவா்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைக் கையாண்டதைக் கருத்தில் கொண்டும் மாநில அளவிலும் பின்னா் அகில இந்திய அளவிலும் இந்தச் சிறந்த 10 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com