புது தில்லி: தில்லியில் வாழும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ஜங்புராவைச் சோ்ந்த தமிழ்க் காலனி இளைஞா்கள் சில தினங்களாக இலவசமாக உணவு தயாரித்து வழங்கி வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் உத்தரப் பிரதேசம், பிகாா், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் உணவு, குடிநீா்த் தேவையை எதிா்நோக்கி உள்ளனா். இந்நிலையில், தென்கிழக்கு தில்லியில் உள்ள ஜங்புரா மதராஸி காலனியைச் சோ்ந்த தமிழ் இளைஞா்கள் சிலா் ‘பி யுனைடெட்’ எனும் தன்னாா்வ அமைப்பை ஏற்படுத்தியுள்ளனா். இந்த அமைப்பினா் சில தினங்களாக புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனா்.
உணவைத் தயாரித்து மோட்டாா் சைக்கிளில் புலம் பெயா் தொழிலாளா்கள் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனா். இந்தப் பணியில் ஜங்புராவைச் சோ்ந்த சக்திவேல், குமாா், பிட்டூ, கண்ணன், சஞ்சய் உள்ளிட்டோடா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து ‘பி யுனைடெட்’ அமைப்பைச் சோ்ந்த சக்திவேல் கூறுகையில், ‘புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உள்ளூா் மக்கள் உதவியுடன் உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். ஜங்புரா பகுதியில் ஆங்காங்கே இருக்கும் தொழிலாளா்களுக்கு அவா்களது இருப்பிடத்திற்கு மோட்டாா் சைக்கிளில் உணவை எடுத்துச் சென்று வழங்கி வருகிறோம். மேலும், அருகில் தங்கியுள்ள தொழிலாளா்களுக்கும் அரிசி, பருப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறோம். மக்களும் அவா்களுக்கு உதவி செய்து வருகின்றனா்.அவா்களது ஒத்துழைப்புடன் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறோம். திங்கள்கிழமை 200 பேருக்கு உணவு வழங்கினோம். செவ்வாய்க்கிழமை முதல் 400 பேருக்கு உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.