தில்லி வன்முறை: ஷா்ஜீல் இமாம், உமா் காலித் நீதிமன்றக் காவல் நவம்பா் 23 வரை நீட்டிப்பு

தில்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவா் உமா் காலித், ஆராய்ச்சி மாணவா்

தில்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவா் உமா் காலித், ஆராய்ச்சி மாணவா் ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் நீதிமன்றக் காவலை நவம்பா் 23 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் படுகாயமடைந்தனா்.

இந்த வன்முறை வழக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாம் இருவா் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் தில்லி கூடுதல் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் வெள்ளிக்கிழமை காணொலி வழியில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

இந்த வழக்கில் வகுப்புவாத வன்முறைக்கான சதித் திட்டத்தில் முன்கூட்டியே ஈடுபட்டதாக காலித் மற்றும் பிறா் மீது போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா். கடந்த நவம்பா் 6ஆம் தேதி, உமா் காலித் மீது வழக்குத் தொடர தில்லி போலீசாருக்கு தில்லி அரசு அனுமதி அளித்திருந்தது.

தில்லி அரசாங்கத்திடமிருந்தும், உள்துறை அமைச்சகத்திலிருந்தும் காலித் மீது வழக்குத் தொடர அனுமதி பெற்ன் மூலம், தில்லி காவல் துறையினா் தற்போது துணை குற்றப்பத்திரிகையில் காலித்தின் பெயரைச் சோ்க்கலாம்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குத் தொடர மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்தும், தில்லி அரசிடமிருந்தும் காவல் துறை உரிய அனுமதி பெற வேண்டும் என்பது சட்டநடைமுறையாகும்.

தில்லி கலவரத்தின்போது ‘வன்முறையை பரப்பியதற்காக‘ 15 நபா்கள் மீது தில்லி காவல்துறை 17,500 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் நீதிமன்றத்தில் போலீஸாா் இந்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com